‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் – ஆதரவும் எதிர்ப்பும்

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் – ஆதரவும் எதிர்ப்பும்

Share it if you like it

பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை திரையிட உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததால் இத்திரைப்படம் வெள்ளிக்கிழமையான நேற்று நாடு முழுவதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியானது.
’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் கதையானது கேரளாவைச் சேர்ந்த ஒரு அப்பாவி இந்துப் பெண்ணின் பயணத்தைத் தொடர்கிறது. அவள் இஸ்லாமிய நண்பர்களால் மூளைச் சலவை செய்யப்பட்டு இறுதியில் மதம் மாறுகிறாள். அவள் பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பப்படுகிறாள். இதனால் அவளுடைய வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.
இந்த படத்தின் இயக்குனரான சுதிப்தோ சென், இந்த திரைப்படத்தின் கதை முற்றிலும் கற்பனையானது அல்ல என்றும், இந்த அபாயகரமான திட்டத்தின் கீழ் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். அவரது கருத்தால் இந்த திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல அமைப்புகள் குரல் கொடுத்தன.
இறுதியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை பலர் ஆர்வத்துடன் பார்த்தனர். எதிர்ப்புக்கு பயந்து சில திரையரங்குகள் திரையிடலை ரத்து செய்தாலும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. இதுவரை ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை பார்த்தவர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் சமமாகவே கிடைத்து வருகின்றது.
பலர் இந்த திரைப்படம் உண்மையான கதையை கூறவில்லை. சில சம்பவங்களை மிகைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என கூறினாலும் பெரும்பாலானோர் ‘தி கேரளா ஸ்டோரி’ பயங்கரவாதத்திற்கு எதிரான விழிப்புணர்வு திரைப்படம் என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பயங்கரவாத குழுக்களில் இளைஞர்களை சேர்க்க தீவிர முயற்சிகள் நடந்து வரும் சூழ்நிலையில் இளைஞர்களும் பெற்றோர்களும் இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
படத்தைப் பார்த்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், கேரள ஃபிலிம் சேம்பர் தலைவருமான ஜி சுரேஷ் குமார், படம் குறித்த சர்ச்சைகள் தேவையற்றவை என்று கூறியுள்ளார். “படத்தை ஒரு பிரச்சாரப் படமாக கருத முடியாது. கேரளாவில் நடந்ததை மட்டுமே இது விவரிக்கிறது. எந்த மதத்தையோ அல்லது மாநிலத்தையோ இழிவுபடுத்தவில்லை. படத்தை விமர்சித்தவர்கள் படத்தைப் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” என்று சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போராட்டம்‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் திரையிடப்பட்டது. படம் வெளியான திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. படம் பார்க்க செல்பவர்கள் போலீசார் மற்றும் திரையரங்கு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்ட பின்பே திரையரங்குக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ( எஸ்டிபிஐ ) உறுப்பினர்கள் படம் திரையிடப்பட்ட தி.நகர் ஏஜிஎஸ் திரையரங்கு வளாகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில போராட்டக்காரர்கள் ஜிஎன் செட்டி சாலையில் இருந்த திரைப்பட போஸ்டரை கிழித்து எறிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதேபோல், திருமங்கலத்தில் உள்ள விஆர் மால்,ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்கம், வேளச்சேரியில் உள்ள பிவிஆர் திரையரங்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் (TMMK) மதியம் ப்ரூக்ஃபீல்ட்ஸ் மால் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மால் வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு பின் அங்கிருந்து போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து மாலை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ -யை சேர்ந்த 65 பேரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த 64 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மோசமான வெளிச்சத்தில் சித்தரிப்பதாகவும், அதன் திரையிடல் மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை திரையிட இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து பலத்த எதிர்ப்பு இருந்த போதிலும் தமிழக அரசு திரைப்படத்திற்கு தடை விதிக்கவில்லை. காவல்துறையினர் முறையாக பாதுகாப்பு அளித்ததால் பெரியளவில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை.
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறியது போல் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நம் சமுதாயத்தில் பயங்கரவாதத்தின் புதிய வடிவத்தை அம்பலப்படுத்த முயற்சித்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர, சமூகத்தை உள்ளிருந்து மாற்றுவதற்கு அவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் இருக்கும் என தெரிந்தும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை உருவாக்கியுள்ள படக்குழுவினரின் துணிச்சலை நாம் பாராட்ட வேண்டும்.


Share it if you like it