தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உங்களை தாக்குவதாக நீங்கள் நினைத்தால், நீங்களும் பயங்கரவாதிதான் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியிருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், அவ்வப்போது அரசியல் சார்ந்த சரவெடிகளையும் அவிழ்த்துவிட்டு வருகிறார். இந்த சூழலில், நேற்று வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து தனியார் செய்திச் சேனல் ஒன்று கங்கனாவிடம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த கங்கனா ரணாவத், “நான் இன்னும் அந்தப் படத்தை பார்க்கவில்லை. ஆனால், படத்தைத் தடை செய்ய நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக படித்தேன். அதேசமயம், தவறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள், படத்தை தடை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. நாட்டின் பொறுப்புமிக்க அமைப்பான உயர் நீதிமன்றமே இப்படிச் சொல்கிறது என்றால், அவர்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.
இப்படத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை மையப்படுத்தி காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு. இதை நான் சொல்லவில்லை. நமது நாடும், உள்துறை அமைச்சகமும் மற்றும் பிற நாடுகளும் அவர்களை பயங்கரவாதிகள் என்றுதானே அழைக்கின்றன. ஆகவே, படத்தைவிட நீங்கள் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் முதலில் சிந்திக்க வேண்டும். அதாவது, ஐ.எஸ்.ஐ.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று நீங்கள் நினைத்தால், நீங்களும் ஒரு பயங்கரவாதிதான். அதேபோல, ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸை அல்ல, இப்படம் எங்களை தாக்குகிறது என்று நீங்கள் நினைத்தால் நீங்களும் ஒரு பயங்கரவாதிதான்” என்று கூறியிருக்கிறார்.