விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ( Tindivanam ) நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக ராஜலட்சுமி வெற்றிவேல் என்ற பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்நிலையில், துணைத்தலைவராக உள்ள ராஜலட்சுமி வெற்றிவேலுக்கு இதுவரை துனைத்தலைவருக்கான தனி இருக்கைகள் வழங்கவில்லை என்றும் நகராட்சி வளர்ச்சி பணிகளில் துணைத்தலைவரை அழைத்து சென்று ஆய்வு செய்வதில்லை எனவும் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் பட்டியலின துணை தலைவர் என்பதால் தனக்குரிய மரியாதையை வழங்கவில்லை என்பதால் உரிய நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரம் ஆட்சியரிடம் ராஜலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் இதுவரை நகர மன்ற தலைவர் அவர்கள் நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் வார்டுகளில் நடைபெறும் ஆய்வுகளுக்கு என்னை அழைப்பதே இல்லை. மேலும் திண்டிவனம் நகர வளர்ச்சி பணிகள் குறித்து நகர மன்ற துணைத் தலைவர் ஆகிய என்னிடத்தில் நகர மன்ற உறுப்பினர்களோடு இதுவரை கலந்து ஆலோசித்ததில்லை. நகர மன்ற தலைவர் அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி திண்டிவனம் நகரம் சார்ந்த திட்டங்களின் அனைத்து முடிவுகளையும் தன்னாட்சியாக எடுக்கிறார். எனவே ஐயா அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த எனக்கு மறுக்கப்படும் உரிமைகளை பெற்று தரும்படி தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அம்மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.