நீலகண்ட பிரம்மச்சாரியின் தேசியமும் தெய்வீகமும் :-
தேசியமும் தெய்விகமும் எனது இருகண்கள் என வாழ்ந்த மகான்கள் பலர். அதில் மிக முக்கியமான ஒருவர் நீலகண்ட பிரம்மச்சாரி. இவர் 1889-ல் சீர்காழிக்கு அருகில், எருக்கூர் என்ற சிறு கிராமத்தில் சிவராமகிருஷ்ண கனபாடிகள் – சுப்புத்தாய் தம்பதிகளுக்கு மூத்த மகனாய் பிறந்தார்.
ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் மேற்கொள் ஒன்றுண்டு
“நீ இருபது வயதில் பொதுவுடமை பேசவில்லையென்றால் உனக்கு இதயம் என்றொன்று இல்லை. முப்பது வயதாகியும் முதலாளித்துவம் பேசவில்லையென்றால் உனக்கு அறிவில்லை”
இந்த மேற்கோளை எளிதாக நீலகண்ட பிரம்மச்சாரிக்குப் பொறுத்திவிடலாம். இருபதுகளில் சிங்காரவேலருடன் சேர்ந்து கம்யூனிச பொதுவுடைமைப் பேச்சு1, முப்பதுகளில் அவர் போற்றிய முதலாளி,
பரப்ரஹ்மம். அவர் முதலாளித்துவம், வேதாந்தம்.
சீர்காழி சபாநாயகர் இந்து மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது முடித்த நீலகண்டனுக்கு குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியவில்லை. பின்னர் சென்னை திருவல்லிக்கேணி அர்பன் கோஆப்பரேட்டிவ் சொசைட்டி (டியுசிஸ்) குமாஸ்தா வேலை. லால் பால் பால் மூவரில் ஒருவரான பிபின் சந்திர பால், சென்னை மெரினா கடற்கரையில் 1907, மே மாதம் சொற்பொழிவாற்றினார். இந்த சொற்பொழிவுகள் நீலகண்டனுள் எரியத்துவங்கிய தேசபக்தி தீபத்திற்கு ஒளி சேர்த்தது. இந்த சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்ததில் பெரும்பங்கு மஹாகவி பாரதியைச் சாரும். பாரதி என்ற காந்தத்தால் ஈர்க்கப்பட்ட நீலகண்டன் டியுசிஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சென்னை ப்ராட்வேயில் அவர் நடத்தி வந்த இந்தியா பத்திரிக்கையில் ஐக்கியமானார். சிறிது நாட்களில், ராஜ துரோக குற்றம் செய்ததாக இந்தியா பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. மஹாகவியை கைது செய்து விடுவார்கள் என்ற துப்பின் பெயரில், நண்பர்களின் வற்புறுத்துதலால் அவர் பிரெஞ்சு காலனியான புதுச்சேரிக்கு குடிபெயர்ந்தார்.
பாரதியை தொடர்ந்து நீலகண்டனும் புதுவை சென்று சிறிதுகாலம் அங்கிருந்த சூரியோதயம் பத்திரிக்கையில் ஆசிரியராக பணியாற்றினார். புரட்சியே ஸ்வராஜ்ஜியத்தின் திறவுகோல் என்று திண்ணமாய் நம்பிய அவர் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு பயணித்து, பாரத்வாஜன், கோவிந்த நாராயண துபே, ஸ்வாமி பிரம்மச்சாரி, நீலகண்ட தத்தா, கோவிந்த நாராயணன் என்று பல பெயர்களில் புரட்சிப் பிரச்சாரம் செய்யலானார்.
ஒரு முறை கடலூர் நியூ டவுனில் பிரபல வழக்கறிஞரும், ஸ்வதேசி சிந்தனையாளருமான, சக்கரவர்த்தி அய்யங்காருடன், நீலகண்டன் ஆயுத புரட்சி பற்றி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். ஒரு கட்டத்தில், உணர்ச்சிப்பிழம்பான நீலகண்டன் ஆட்சி செய்யும் வெள்ளையர்களை நாம் கேள்வி கேட்கும் நாள் விரைவில் வரும், அன்று அவர்கள் தங்கள் குருதியால் பதில் சொல்லுவார்கள் என்று கூறினாராம். அதிர்ச்சியடைந்த அய்யங்கார் அந்நாள் என்று வரும் என்று கேட்டதற்கு, ஆவேசத்துடன் மேஜையில் தன் முஷ்டியால் ஒரு குத்து குத்தி, “இந்த பாரத பூமி நாம் பிறந்த ஜென்ம பூமி. இதன் மீது ஆணையாய்ச் சொல்கிறேன், இன்னும் பத்து வருடங்களில் நாம் சுதந்திரம் அடைவோம்.” என்று சூளுரைத்தாராம்.
அந்த சமயத்தில் நெல்லையில் கலெக்டர் விஞ்ச்சால், வ உ சிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்ரமணிய சிவம் கைது செய்யப்பட்டு பாளையம்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டது மக்கள் மனதில் ஒரு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நீலகண்ட பிரமச்சாரி தன் நண்பர்களாம் கிருஷ்ணாபுரம் சங்கரகிருஷ்ணன், செங்கோட்டை வாஞ்சிநாதன், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை போன்ற பலருடன் சேர்ந்து தென்காசி, தூத்துக்குடி போன்ற ஊர்களில் பாரத மாதா சங்கம் என்ற பெயரில் ஒரு புரட்சி இயக்கத்தை உருவாக்கினார்.
பின்னர் திருநெல்வேலி சதி வழக்கு என்று அறியப்பட்ட கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் நீலகண்ட பிரம்மச்சாரி. ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டபோது காசியில் இருந்த அவர், பின்னர் கல்கத்தாவில் கைதுசெய்யப்பட்டு தமிழகம் அழைத்துவரப்பட்டார். ஆட்சிக்கு எதிராக சதி செய்து பிரிட்டிஷ் அரசருக்கு எதிராக யுத்தம் தொடுத்ததாக” சட்டப் பிரிவு 121A-வின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசாங்கத் தரப்பில் 280 சாட்சிகளும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் 200 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். முடிவில் நீலகண்டனுக்கு ஏழு வருட கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
புரட்சிக்கார நீலகண்டன் இரண்டு ஆண்டுகளில் பெல்லாரி சிறையிலிருந்து தப்பி ஓடினார். மீண்டும் ஆந்திரா மாநில தர்மாவரம் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, ஆறுமாத கடுங்காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஏழரை ஆண்டு கடுங்காவல் தண்டனைக்காலத்தை, பெல்லாரி, சென்னை, பாளையங்கோட்டை, கண்ணனூர், கோவை, ராஜமகேந்திரபுரம், விசாகப்பட்டினம் ஆகிய ஏழு சிறைகளில் கழித்து 1919 ஆகஸ்டில் விடுதலையானார்.
சிறையிலிருந்து திரும்பிய நீலகண்டன் சென்னையில் தங்கி தன் ஸ்வதேசி பணிகளை மீண்டும் செய்யத்துவங்கினார். அது நீலகண்டனின் வாழ்க்கையின் மிகக்கடினமான நாட்கள், பல நாட்கள் உணவு உண்ணக்கூட வழியில்லாமல், உண்ணாமல் உறங்குவாராம், சிலநாட்கள் இரவில் உணவு யாசித்தும் உண்டிருக்கிறாராம். பசிக் கொடுமை தாங்கமுடியாமல் ஒருநாள் திருவல்லிக்கேணியில் இருந்த மஹாகவி பாரதியின் வீட்டிற்க்கு சென்று அவரிடம், எனக்கு பசி வயிற்றைக் கிள்ளுகிறது ஒரு நாலணா இருக்குமா, ஏதாவது வாங்கி சாப்பிட்டுக்கொள்வேன் என்றாராம். அப்பொழுது மஹாகவி பாடியவரிகள் தான், தனியருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம். மஹாகவியின் இறுதியாத்திரையில் அவரைச் சுமந்த நான்கு தோள்களில் ஒன்று நீலகண்ட நீலகண்ட பிரம்மச்சாரியுடையது.
அதன்பின் தேசாந்திரியாக நாடுமுழுதும் சுற்றிய நீலகண்டன், சத்குரு ஓம்கார் என்ற சன்யாச பட்டமேற்று பெங்களூரு அருகிலுள்ள நந்தி மலை அடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்து சனாதன தர்மத்திற்கு சேவை செய்ய துவங்கினார். அவர் எழுத்துக்கள் ல பிரைல் என்ற புனைப் பெயரில் வேதாந்த கேசரி (மயிலாப்பூர்) இதழிலும், பின்னாளில் தேசிய இதழான ஆர்கனைசரில் நம் தர்மம் பற்றியும் எழுதியது மிகப் பிரசித்தம். பாரதம் முழுதும் பல சீடர்கள் கொண்ட சத்குரு ஓம்கார் அவர்களின் சிவராத்திரி மற்றும் துர்காஷ்டமி யக்ஞ பிரசாதம் தீராத நோய்களையும் தீர்க்கும் என்று போற்றியவர்கள் பலர்.
பழுத்த சன்யாசியாய், சனாதன தர்மத்துக்கு சேவை செய்துவந்த யதீஸ்வரன், சத்குரு ஓம்கார் 1978 மார்ச் 4-ஆம் நாள் விதேஹ முக்தி அடைந்தார். அவர் முக்தி தினமாம் இன்று அவர் நினைவு போற்றி அவர் பாதகமலம் வணங்குவோம்.
-ராஜா பரத்வாஜ்