சமீபத்தில் சிஏஜி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அடிப்படையில் சுமார் 7.50 லட்சம் கோடி அளவில் மத்திய அரசு துறைகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பாரத் மாலா திட்டம் – துவாரகா விரைவுப் பாதை கட்டுமான திட்டம் – சுங்க சாவடி கட்டணங்கள் – ஆயுஷ்மான் பாரத் திட்டம் – அயோத்தியா மேம்பாட்டு திட்டம் – கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்டம் – எச் ஏ எல் விமான வடிவமைப்புத் திட்டம் ஆகிய ஏழு திட்டங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிப்பதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பாஜகவின் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.
இந்த சிஏஜி அறிக்கை குறிப்பிடும் ஊழல் குற்றச்சாட்டாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் விவகாரங்களில் மத்திய அரசு அல்லது பாஜக கட்சியின் விளக்கங்கள் அவர்கள் தரப்பு விவாதங்கள் எதுவுமே வெளிவராத நிலையில் ஒருதலைப் பட்சமாக ஊழல் நடந்திருக்கிறது என்று இவர்கள் குறிப்பிடுவது இந்த சிஏஜி அறிக்கையை பற்றி நாடு முழுவதும் இவர்கள் பாஜக எதிர்ப்பை கட்டமைக்க முன்னெடுக்கும் ஒரு திட்டமிட்ட டூல் கிட் அரசியலா? என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.
தமிழக முதல்வர் சொல்வது போல் குறிப்பிட்ட மத்திய அரசின் ஏழு துறைகளில் 7 லட்சம் கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாக குறிப்பிடும் அவரே. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற நோயாளிகள் மருத்துவ காப்பீட்டு பயனாளிகள் வகையில் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடுகிறார் . அப்படி எனில் இது தனி மனிதர்கள் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை பயனாளர்கள் என்ற வகையில் அனுபவித்த தனி மனித தவறுகள் என்பது தெளிவாகிறது. அப்படி தனிமனித தவறுகளாக இருக்கும் பட்சத்தில் அதற்கு துணை நின்ற உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அரசு இயந்திர பொறுப்பாளர்கள் யார் ? என்பதை முதலில் வெளிக்கொணர வேண்டும் .அந்தப் பயனாளர்கள் உண்மையில் அரசாங்கத்தை ஏமாற்றி தான் நலத்திட்டங்களை பெற்றுக் கொண்டார்களா? என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும்.
அதன் பிறகு இவ்விஷயத்தில் உடன்பட்டவர்கள் துணை போனவர்கள் யார்? என்பதை வைத்துத்தான் இது தனிமனித தவறுகளா ?அல்லது பெரும் ஊழலா? என்பதை முடிவு செய்ய முடியும் .தவறு நடந்தது உறுதியாகும் பட்சத்தில் இந்த தனி மனித தவறுகளுக்கு ஏதேனும் கட்சி அரசியல் சார்ந்த அமைப்புகள் துணை நிற்கிறதா ? என்பதை வெளிக்கொணர வேண்டும் .அந்த கட்சி அமைப்பை சார்ந்தவர்கள் பாஜக அல்லது பாஜக ஆதரவாளர்கள் என்று இருக்கும் பட்சத்தில் தான் ஆளும் கட்சி நபர்களின் ஊழல் என்று இதை சொல்ல முடியும். அப்படி ஊழல் குற்றச்சாட்டு உண்மையாகும் பட்சத்தில் அந்த ஊழலுக்கு காரணமானவர்கள் மேல்மட்ட அரசு இயந்திரத்தாலோ கட்சி தலைமையாலோ பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அது பாஜக கட்சியின் ஊழலாக தேசிய தலைமையின் மத்திய அரசு ஊழலாக கருத முடியும்.
மாறாக தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் ஆனால் அது தனிமனித தவறுகளாகவே கருதப்படும் . அப்படி இருக்கையில் வெளிவந்த ஒரு அறிக்கையின் அடிப்படையில் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதிலை கூட பொருட்படுத்தாமல் தான் தோன்றித்தனமாக ஊழல் நடந்திருக்கிறது என்று குற்றச்சாட்டு வைப்பது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது பாஜக மற்றும் கூட்டணிகளை ஊழல் கறை படித்தவர்களாக மக்கள் மனதில் கட்டமைத்து அவர்களின் வெற்றியை தடுக்க வேண்டும் என்ற திட்டமிட்ட டூல் கிட் அரசியலாகவே பார்க்கப்படும்.
துவாரகா விரைவு சாலை கட்டுமானத்தில் ஒரு கிலோமீட்டருக்கு 18 கோடி ரூபாயாக இருந்த செலவு 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை மட்டும் வைத்து ஊழல் நடந்ததாக சொல்ல முடியாது. 18 கோடி கட்டுமான செலவு நிர்ணயித்த போது இருந்த தரம் அதன் கட்டமைப்பு திட்டங்கள் என்னவாக இருந்தது.? 250 கோடி ரூபாய் அளவில் கூடுதல் செலவு வந்த நிலையில் அதில் கூடுதலாக என்னென்ன கட்டுமான வசதிகள் அல்லது இணைப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டது? . கூடுதலாக ஏதேனும் உள்கட்டமைப்பு மேம்பாடு அல்லது கூடுதல் நவீன தொழில்நுட்பங்கள் கட்டுமானத் தேவைகள் புகுத்தப்பட்டதா ?அதற்கான செலவுகள் என்ன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை வைத்து தான் ஊழல் நடந்திருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய முடியும்.
18 கோடி செலவை 250 கோடியில் மாற்றி செய்ததால் மட்டும் ஊழல் என்று சொல்வார்களே ஆனால் அதற்கு முன் உதாரணமாக ரபேல் விமானத்தை கடந்த ஆட்சியில் வாங்கும் போது என்ன விலை இருந்தது? தற்போதைய ஆட்சியில் வாங்கும் போது எத்தனை கோடி கூடுதல் செலவானது? அதில் நவீன தொழில்நுட்பங்கள் அத்தியாவசிய போர்க்கால தேவைகள் புகுத்தப்பட்டதன் காரணம் தான் கூடுதல் விலை என்று மத்திய அரசு ஆவணங்களோடு உரிய விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து அதன் காரணமாக ரபேல் வழக்கில் இவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு போலியானதும் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டு நீதிமன்றத்தில் இருந்து குட்டு பட்டு வெளிவந்ததும் கடந்த கால வரலாறு.
தமிழகத்தின் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் விவசாய நலத்திட்ட பயனாளர்கள் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு கூடுதலாக இருந்த விவகாரம் வெளியானதும் அதன் அடிப்படையில் விசாரணை நடந்தது விவசாயிகள் அல்லாதவர்கள் கூட விவசாயிகள் என்ற போர்வையில் மத்திய அரசின் விவசாயிகள் உதவி தொகையை பல ஆண்டுகள் பெற்று வந்ததும் அம்பலமானது .அதில் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் சம பங்காளிகளாக உள்ளூர் கட்சி பிரமுகர்கள் உதவியோடும் அரசாங்க அதிகாரிகளின் துணையோடும் தான் இந்த முறைகேடு நடந்ததும் வெட்ட வெளிச்சமானது. ஒரு ஆண்டுக்கு 20 கோடிக்கும் மேலான மத்திய அரசின் விவசாயிகள் நலத்திட்ட தொகை இந்த வகையில் பல ஆண்டுகள் கொள்ளையடிக்கப்பட்டதும் அம்பலமாகி அவர்களுக்கான உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்பட்டு பயனாளர்கள் பட்டியலில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.
இந்த விஷயத்தில் விவசாயிகள் என்ற போர்வையில் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும் தனி மனிதர்கள் அவர்களுக்கு துணையாக இருந்தவர்கள் இந்த மாநிலத்தின் கட்சி சார்ந்த அரசியல் பிரமுகர்கள் மட்டுமே. அதில் பாஜக கட்சி பிரமுகர்கள் என்று எவரது பெயரும் இந்த நாள் வரை வெளிவரவில்லை. ஆனால் இந்த முறைகேடு நடந்தது பாஜகவின் ஆட்சிக் காலத்தில் தான் மத்திய அரசின் நலத்திட்டம் முறைகேடாக பெறப்பட்டதும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் தான் என்ற பட்சத்தில் இது தனி மனித தவறுகளாக இந்த தவறுகளை ஊக்குவித்து ஆதாயம் அடைந்த கட்சிகளின் முறைகேடு முறைகேடாக பார்க்க வேண்டுமா ? அல்லது இதுவும் பாஜகவின் ஊழலில் தான் வர வேண்டுமா? என்பதை அறிவார்ந்த அவர்கள் யோசித்துப் பாருங்கள்.
அதே வரிசையில் வேறு எங்கேயும் தவறு நடந்து இருக்கிறதா? தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் போல வேறு மாநிலங்களில் எங்காவது இதுபோல முறைகேடு செய்திருக்கிறார்களா ? என்பதை உடனடியாக விசாரணை செய்ய வேண்டியது அவசியம். தவறுகள் நடந்திருக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் . அரசின் நலத்திட்டம் அதன் பயனிட்டுத் தொகை மடைமாற்றம் செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது .ஆனால் சிஏஜி அறிக்கை என்ற பெயரில் வெளியான தகவல்களுக்கு அதன் உண்மை தன்மை அதன் பின்னணி என்ன ? அது பற்றி மத்திய அரசு சம்பந்தப்பட்ட துறை சார் அமைச்சகங்கள் கொடுக்கும் விளக்கம் என்ன ? என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக ஊழல் புகாரை வாசிப்பது திட்டமிட்ட தேர்தல் அரசியலே.
பாஜகவிற்கு எதிராக திட்டமிட்டு பல்வேறு விஷம பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகள் அவதூறு செய்து வரும் வேலையில் ஒரு சி ஏ ஜி அறிக்கையை முன்னிறுத்தி இது போன்றதொரு ஊழல் குற்றச்சாட்டை அடுக்குவதும் அதை ஊடகங்கள் துணையோடு மக்கள் மந்தியில் அவசர அவசரமாக கொண்டு போய் சேர்ப்பதையும் பார்க்கும்போது இதன் பின்னணியில் தேசிய அளவில் ஒரு பெரும் அரசியல் சதி இருப்பதாகவே தோன்றுகிறது. காரணம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 15 லட்சம் ரூபாய் பங்கிட்டு கொடுக்கும் அளவிலான இந்திய பணம் வெளிநாடுகளில் பதித்து வைத்திருக்கிறது என்று சொன்ன ஒரு விஷயத்தை மோடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று சொன்னார் என்று இப்போது தமிழகம் முழுவதும் எப்படி வெறுப்பு அரசியல் கட்டமைக்கப்படுகிறது அதே வகையில் ஊழல் நடந்ததாக சிஏஜி அறிக்கையை சொல்லி இருக்கிறது பாருங்கள் என்று அடுத்த ஒரு விஷம பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான ஒரு பெரும் சதியாக தான் இந்த விஷயத்தை பாஜக அணுக வேண்டும்.
சிஏஜி அறிக்கை அது குறிப்பிடும் விஷயங்கள் அதில் உள்ள மாறுபாடுகளின் எதார்த்தம் நடைமுறைகள் என்று அனைத்தும் உரிய வகையில் வெளியாகும் பட்சத்தில் இதே வேகத்தோடு அரசியல்வாதிகள் ஊடகங்கள் மக்கள் முன் இந்த தகவலை கொண்டு சேர்ப்பார்களா? என்றால் நிச்சயம் இல்லை. காரணம் அவர்களுக்கு தேவை எதிர்மறை பிரச்சாரம் மட்டுமே. அந்த வகையில் இந்த அறிக்கையையும் அதன் பின்னணி விஷயங்களையும் வைத்து பாஜகவை ஊழல் கட்சி என்ற விஷமப் பிரச்சாரம் செய்யவும் மோடி அரசு ஊழலுக்கு துணை போகிறது என்ற வகையில் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவரது மிஸ்டர் கிளீன் இமேஜை உடைத்து எதிர்க்கட்சிகள் தேர்தல் வெற்றிக்கான திட்டமிட்ட விஷம் அரசியலாகவே பார்க்க வேண்டும் .
அந்த வகையில் சிஏஜியின் அறிக்கையின் அடிப்படையில் இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கும் யதார்த்தம் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடுகளை உடனடியாக வெளிக்கொணர்ந்து இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் தேர்தல் அரசியல் சதியையும் திட்டமிட்ட விஷம பிரச்சாரத்தையும் மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். மக்கள் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களை போலி அடையாளங்களோடும் தகுதியற்ற பயனாளிகள் என்ற போர்வையிலும் இந்தத் திட்டங்களை அனுபவிப்பதன் மூலம் அரசுக்குப் பெரும் இழப்பையும் அந்த அரசைப்படி நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு பெரும் அவப்பெயரையும் ஏற்படுத்தும் இது போன்ற நபர்களையும் அவர்களுக்கு துணைபோகும் உள்ளூர் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் என்று அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகங்களும் லஞ்ச – ஊழல் செயல்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உதவும்.