பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தை வேலு. இவருக்கு சங்கவி என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமான நிலையில், சக்திவேலுக்கும் திருமணமாகி அவர் தனது மாமனார் வீட்டில் தங்கி அவர்களது ரைஸ் மில்லை கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு குழந்தைவேலுவுக்கும் அவரது மகனிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாகக் கூறப்படுகிறது. குழந்தை வேலுவும் ரைஸ் மில் வைத்திருக்கும் நிலையில், தன்னை மகன் கண்டு கொள்ளவில்லை என்று சக்திவேல் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி குழந்தைவேலை அவரது மகன் சக்திவேல் கடுமையாக தாக்கியதில் குழந்தைவேலின் மூக்கு மற்றும் தாடைகளில் காயம் ஏற்பட்டு திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து பிப்ரவரி 19 ஆம் தேதி குழந்தைவேலு வீட்டிற்குத் திரும்பினார். இந்நிலையில், ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு வழக்கம் போல் தூங்கச் சென்ற குழந்தை வேலு, அடுத்தநாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது அறையில் சென்று பார்த்தபோது அவர் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த கை.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குழந்தை வேலுவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு சக்திவேல் மீது தந்தையை தாக்கியது, ரத்தக்காயம் ஏற்படுத்தியது, ஆபாச வார்த்தைகளால் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளைச் சிறைக்கு அடைத்தனர்.