பகவத் கீதையின் போதனைகள் உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல வேண்டும் !

பகவத் கீதையின் போதனைகள் உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல வேண்டும் !

Share it if you like it

மகாபாரத போர் நடந்த இடமாகக் கருதப்படும் ஹரியாணாவின் குருஷேத்ராவில் ஆண்டுதோறும் பகவத் கீதை மகா உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் சர்வதேச பகவத் கீதை மகா உற்சவம் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. வரும் 24-ம் தேதி நிறைவடைகிறது. கடந்த 1989 முதல் குருஷேத்ரா வளர்ச்சி வாரியம் பகவத் கீதை மகா உற்சவத்தைக் கொண்டாடி வந்த நிலையில், கடந்த 2016 முதல் ஹரியாணா அரசும், குருஷேத்ரா வளர்ச்சி வாரியமும் இணைந்து அதனை சர்வதேச நிகழ்வாகக் கொண்டாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த விழாவில் பங்கேற்க ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் குருஷேத்ரத்துக்கு வருகை தருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பகவத் கீதை மகா உற்சவ நிகழ்ச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ”வருடாந்திர சர்வதேச பகவத் கீதை மகா உற்சவம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்பினார். கடந்த 2016 முதல் அதனை ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் நிறைவேற்றிக் காட்டி வருகிறார். பகவத் கீதையின் போதனைகள் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல வேண்டும். கடந்த 2016 முதல் பகவத் கீதை மகா உற்சவம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக பகவத் கீதை மகா உற்சவம் அதன் நோக்கங்களை நிறைவேற்றி உள்ளது” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் உள்பட பலர் பங்கேற்றனர்.


Share it if you like it