தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உலக இந்து மாநாடு 2023 நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே, வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் மிலிந்த் பராண்டே, இணைப் பொதுச் செயலாளர் சுவாமி விஞ்ஞானானந்தா, மாதா அமிர்தானந்தமயி, பிரபல திரைப்பட இயக்குனர் அக்னிஹோத்ரி, தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு, ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பலர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர்.
மாநாட்டின் முதல் நாளான நேற்று, மாதா அமிர்தானந்த மயி, மோகன் பகவத், தத்தாத்ரேய ஹொசபலே, மிலிந்த் பராண்டே உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர். தொடக்க நிகழ்ச்சியில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே, அவரது உரை மாநாட்டில் வாசிக்கப்பட்டது.
அந்த உரையில், “இந்து மதத்தின் கொள்கைகள் மற்றும் விழுமியங்களின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக இந்து மாநாட்டை தாய்லாந்து நடத்துவது பெருமையாக உள்ளது. கொந்தளிப்புடன் போராடிக் கொண்டிருக்கும் உலகம், இந்துமத விழுமியங்களான அகிம்சை, சத்தியம், சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தில் இருந்து உத்வேகம் பெற வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதி திரும்பும்” என்று தெரிவித்திருந்தார்.