நம் பாரதத்தில் பிறந்த தலைசிறந்த தேசபக்தர்களில் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். சிறந்த ஆன்மீகவாதியான தேவர் இந்து மதத்தின் பாதுகாவலராக விளங்கினார். அதே சமயம் பிற மதங்களையும் அம்மதத்தை சார்ந்தவர்களையும் மரியாதையுடன் நடத்தியவர் தேவர்.
1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் என்ற ஊரில் உக்கிரமமாபாண்டி தேவர், இந்திராணி அம்மையாருக்கும் ஒரே மகனாக பிறந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
ஆறு மாத குழந்தையாக இருந்த போதே தாயை இழந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது தாய் வழி பாட்டி பார்வதி அம்மாள் வளர்த்தார். இளம்பிராயத்திலேயே அவருக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாசங்கள் மூலம் நாம் பாரதத்தின் கலாச்சாரம், பண்பாடு வழிமுறைகளை சொல்லிக் கொடுத்த பெருமை அவரது பாட்டியையே சேரும்.
இளம் வயதிலேயே மிகுந்த அறிவு திறன் கொண்ட தேவருக்கு அவரது தந்தையின் குடும்ப நண்பரான குழந்தைசாமி பிள்ளை கல்வி கற்க உதவினார். தமிழ் மொழி மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் மிகுந்த பற்று வைத்திருந்தார் தேவர். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளேக் நோய் பரவியதால் தேவரால் தன் பள்ளிப்படிப்பை முடிக்க முடியாமல் போனது. பள்ளிப் படிப்பு முடிவுக்கு வந்தாலும், தேவர் படிப்பதை நிறுத்தவில்லை. அரசியல், வரலாறு, பொது விவகாரங்கள், மதம், தத்துவம், வானசாஸ்திரம், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் ஜோதிடம் தொடர்பான புத்தகங்களைப் படித்தார்.
அவர் சிலம்பம் (தற்காப்பு கலை), குதிரை சவாரி மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றையும் கற்றுக்கொண்டார். தேவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் தனது சொற்பொழிவுக்காக அறியப்பட்டவர் மற்றும் சிறந்த பொதுப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்.
இளம் பிராயத்திலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த தேவர் தேச பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
குறிப்பாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தீவிர பக்தராக மாறினார்.நேதாஜியும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது மிகுந்த அன்பையும் மரியாதையும் கொண்டிருந்தார். ஒருமுறை தேவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற நேதாஜி தன் தாயாரிடம் அவரை அறிமுகப்படுத்தும்போது தனது தம்பியை அழைத்து வந்துள்ளதாக கூறினார்.
இந்திய தேசிய ராணுவத்திற்கு (INA) ஆட்களை திரட்டுவதில் தேவர் முக்கிய பங்கு வகித்தார். தேவர் கேட்டுக்கொண்டதால்தான் மதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஐஎன்ஏவில் இணைந்தனர். “நேதாஜி” என்ற தமிழ் வார இதழை ஆரம்பித்த தேவர் இளைஞர்களை ஐஎன்ஏவில் சேர தூண்டினார்.
தேசபக்தராக மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும் தேவர் அறியப்பட்டார்.
அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சி அரசாங்கம் 1920ல் குற்றப்பரம்பரை சட்டத்தை கொண்டு வந்தது. அது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தியது. இந்த அடக்குமுறைச் சட்டத்திற்கு நீதிக்கட்சியின் (இன்றைய தி.மு.க.வின் தாய் அமைப்பு) ஆதரவு இருந்தது. ஆனால் தேவர் இந்த சட்டத்திற்கு எதிராக தீவிரப் போராட்டங்களை நடத்தினார். சட்டத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டினார். இந்தச் சட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்காக தேவரை பலமுறை காங்கிரஸ் அரசு கைது செய்தது. இதனால் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இழந்த தேவர் நேதாஜியால் உருவாக்கப்பட்ட பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர்ந்தார்.
மேலும் தமிழ்நாட்டில் தலித்துகளுக்கான கோயில் நுழைவுப் போராட்டத்தின்போதும் தேவர் முன்னணியில் இருந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவை வழி நடத்த வைத்தியநாத ஐயர் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு உயர்சாதி வகுப்பினாரிடமிருந்து எதிர்ப்புகளுடன், உயிருக்கு அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. அப்போது, ராஜாஜி, வைத்தியநாத ஐயரிடம் தேவரைச் சந்தித்து, இதில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த விஷயத்தை அறிந்த தேவர், நகரம் முழுவதும் ‘பிட் நோட்டீஸ்’ வெளியிட்டார். அதில் “நான் மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் இருப்பேன். தலித்துகள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கத் துணிபவர்கள் என்னை வந்து சந்திக்கட்டும். நான் அவர்களுக்கு பதில் சொல்கிறேன்.” என கூறியிருந்தார். இது வைத்தியநாத ஐயர் மற்றும் பிறரைத் தாக்கத் திட்டமிட்டிருந்தவர்களை பின் வாங்க வைத்தது.
தீவிர தேசியவாதி
தேவர் ‘தேசியம்’ மற்றும் ‘ஆன்மிகம்’ ஆகியவற்றை தனது இரு கண்களாகக் கருதினார். “தெய்வீகம் இல்லாத அரசியல் ஆன்மா இல்லாத உடல்” என்று தேவர் தம் சீடர்களுக்கு உபதேசித்தார். தேவர் தமிழ்நாட்டில் நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சிக்கு தலைமை தாங்கினார். தமிழ்நாட்டின் முக்கிய தேசியவாத குரல்களில் ஒருவரானார். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் தேவர். காஷ்மீருக்கு 370வது பிரிவின் மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதை அவர் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தார்.
திராவிட கட்சிகள் மற்றும் பெரியார் அமைப்புகள் வடக்கு தெற்கு என்று நாட்டை பிளவுபடுத்துவதையும் கடுமையாக எதிர்த்தார் தேவர்.
தேவரும் ஆர் எஸ் எஸ் அமைப்பும்
தேச நலனுக்காக பணியாற்றி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ஒரு முறை ஆர்எஸ்எஸ் அமைப்பின் 2வது தலைவரான எம்.எஸ்.கோல்வால்கர் மதுரை வந்தபோது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவரை சந்தித்துப் பேசினார்.
மேலும் கோல்வால்கரின் 51-வது பிறந்த நாள் விழா 1956-ம் ஆண்டு நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது மதுரையில் நடைபெற்ற கோல்வாகர் பிறந்த நாள் விழாவுக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமை வகித்தார். இந்த விழாவில் பேசிய முத்துராமலிங்க தேவர், தம் கருத்துகள் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துடன் இணைந்தே இருக்கின்றன என்றார்.
இன்றைய திமுக அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தேவருக்கும் உள்ள தொடர்பை பொய் என்று பிரச்சாரம் செய்தாலும் உண்மையை ஒரு நாளும் மாற்ற முடியாது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். தன் சொத்துக்களை தலித் சமூக மக்களுக்காக தானமாக வழங்கியவர். தேசத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தேவர் 1963ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி காலமானார். மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழக மக்களால் குறிப்பாக பசும்பொன் கிராம மக்களால் கடவுளாக போற்றப்படுகிறார்.
ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த நாள் மற்றும் மறைவு நாளான அக்டோபர் 30ஆம் தேதி, அவரது நினைவாக தேவர் ஜெயந்தியாகவும் ‘குரு பூஜை’யாகவும் அனுசரிக்கப்படுகிறது.
ஆனால் பாரதமே போற்ற வேண்டிய மிகச் சிறந்த தேச பக்தரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரை இன்றைய திராவிட கட்சிகள் தேவர் சமூக மக்களின் வாக்கு வங்கிக்காக அவரை வெறும் ஜாதி தலைவராக அடையாளப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயமாகும். அவரது சமூக தொண்டுகளையும் தேசப் பணிகளையும் நாடறிய செய்வது நமது கடமையாகும்.
நிரஞ்சனா