கல்நெஞ்சையும் கரைய வைக்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’!

கல்நெஞ்சையும் கரைய வைக்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’!

Share it if you like it

நாடு முழுவதும் நேற்று ரிலீஸாகி இருக்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தைப் பார்த்துவிட்டு ஏராளமானர் கண் கலங்கினர். அப்படி இந்தப் படம் என்னதான் சொல்கிறது?

ஜம்மு காஷ்மீரில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பண்டிட்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதுதான் ஒற்றை வரிக் கதை. இதை சுருக்கமாகவும், அதேசமயம் மிகவும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் படத்தின் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் என ஒரு பட்டாளமே நடித்திருக்கிறது.

படத்தின் கதை இதுதான்… ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லட்சக்கணக்கான ஹிந்து பண்டிட்கள் மற்றும் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் என மைனாரிட்டி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர் பெரும்பான்மையான இஸ்லாமிய அடிப்படைவாதிகள். உதாரணமாக, ஹிந்து பண்டிட்களின் உணவுக்கு தானியங்கள்கூட கிடைக்க விடாமல் செய்கின்றனர். தப்பித் தவறி ஹிந்து பண்டிட் வீட்டில் தானியங்கள் இருப்பது தெரிவந்தால், அவற்றை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அபகரித்துச் செல்வார்கள் அல்லது தானியங்களை வீதியில் வீசிவிட்டுச் செல்வார்கள்.

இந்த சூழலில், ஒரு காலகட்டத்தில் (1990-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம்) ஹிந்து பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை மதம் மாறும்படி பகிரங்கமாக அறிவிக்கிறது மெஜாரிட்டி இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல். அப்படி மாற மறுத்தால் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் அறைகூவல் விடுக்கிறது. இதையும் மீறி இங்கிருந்தால் சுட்டுக் கொல்வோம் என்கிறார்கள். இதை நிறைவேற்றவும் செய்கிறார்கள் என்பதுதான் வேதனை. காஷ்மீரை விட்டு வெளியேறாமல் இருக்கும் ஹிந்து பண்டிட்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொல்கிறார்கள். இதில் கர்ப்பிணி பெண்களும் அடக்கம்.

இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், லோக்கல் போலீஸாரை விரட்டி விட்டு, ராணுவ வீரர்களைப் போல உடையணிந்து வந்து, பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம். தைரியமாக வெளியே வாருங்கள் என்று நம்ப வைத்து, வெளியில் வரும் பண்டிட்களை கொடூரமாக சுட்டுக் கொல்கிறது இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல். எங்கு பார்த்தாலும் ரத்தம் ரத்தம்… ஆனால், படத்துக்கு ஏ சர்டிபிகேட் கிடைத்தாலும் பரவாயில்லை என்று சொல்லி, இந்தக் காட்சிகளை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. இதனால், காஷ்மீரை விட்டு பரிதாபமாக வெளியேறி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அகதிகளாக தஞ்சம் புகுகிறார்கள் ஹிந்து பண்டிட்கள். இதுதான் மீதிக் கதை.

அதேசமயம், இந்த கொடூரத்தை நியாயப்படுத்தும் வகையில், கம்யூனிஸ்ட்கள் எப்படியெல்லாம் கட்டுக்கதைகளை கட்டி விடுகிறார்கள், மாணவர்களை எப்படியெல்லாம் மூளைச்சலவை செய்தார்கள் என்பதையும் தெளிவாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறார் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. அதேபோல, அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி, இதை கண்டும் காணாமல் இருந்ததையும் அம்பலப்படுத்தி விட்டார். இந்தப் படம் மட்டும் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வந்திருந்தால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் பரிதாபத்துக்குரியதாக இருந்திருக்கும்.

இந்தப் படத்தை பார்த்துவிட்டுத்தான் ஏராளமான ஹிந்துக்கள் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். இப்படத்தைப் பார்த்த காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண், இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரியை கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் காண்போர் கண்களை குளமாக்கியது என்றால் மிகையல்ல. ஆக மொத்தத்தில், ஒரே திரைப்படத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் சுயரூபம் ஆகியவற்றை வெளிச்சம்போட்டுக் காட்டி விட்டார் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. தில்லாக இப்படத்தை வெளியிட்ட இயக்குனர் விவேக்குக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்! இப்படத்துக்கு ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வரி விலக்கு அளித்திருப்பது கூடுதல் தகவல்.


Share it if you like it