தேனியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. ஆம்புலன்ஸ், பஸ், போலீஸ் ஜீப் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று காலை முதலே பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிறைவாக, பட்டாளம்மன் கோயில் தெரு இளைஞர்களும், தெ,கல்லுப்பட்டி இளைஞர்களும் அக்னி சட்டி ஏந்தி, மேளதாளங்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது, யார் முதலில் செல்வது என்பதில் 2 கோஷ்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், இது அடிதடியாக மாறிய நிலையில், விழாவுக்கு போடப்பட்டிருந்த சேர்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை இளைஞர்கள் அடித்து நொறுக்கினர். தடுக்க முயன்ற போலீஸாரையும், இளைஞர்கள் விரட்டி அடித்தனர்.
மேலும், காவல் நிலையத்திற்குள் புகுந்து உள்ளே இருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். அதோடு, காவல் நிலையம் மீதும் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர். தவிர, காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஜீப், 108 ஆம்புலன்ஸ், பஸ் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி உட்பட 13-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர். இதையடுத்து, சிறப்புப் படையினர் குவிக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இச்சம்பவத்தால் பெரியகுளத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.