மத்திய அரசின் திட்டங்கள் ஏழை மக்களை சென்றடைய விடாமல் தமிழக அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே குற்றம்சாட்டி இருக்கிறார்.
தமிழகத்திற்கு வந்திருக்கும் மத்திய எஃக்கு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே, தேனியில் நேற்று நடந்த பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், “மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இதனால், மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஆகவே, அவர்களுக்கு சந்தைப்படுத்தும் வாய்ப்புக்களை நாம்தான் உருவாக்கித் தர வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கிறது. இதனை அதிகரிக்க வேண்டும்.
அதேபோல, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகள் குறைவாக இருக்கின்றனர். இதனையும் அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அதிகளவில் இல்லை. இதனால், மத்திய அரசின் திட்டங்கள் ஏழை மக்களுக்குச் சென்றடைய விடாமல் மாநில அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதனை தவிர்க்க, பா.ஜ.க. நிர்வாகிகள் கிராமங்கள்தோறும் வீடு வீடாகச் சென்று மத்திய அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஏழைகளை பயனாளர்களாக மாற்ற வேண்டும். நான் அடுத்தமுறை இங்கு வரும்போது மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, தேனியில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, மாவட்டத்தில் இதுவரை நடந்த திட்ட விபரம், நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வு செய்தார். மேலும், மத்திய அரசின் வேலை உறுதித்திட்டம், துாய்மை பாரத இயக்கம், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம், தொழில் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், விரைவில் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.