ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு அம்பேத்கார் பேரன் அறிவுரை கூறி இருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியின பெண்மணி திரெளபதி முர்மு களம் இறக்கப்பட்டு இருக்கிறார். தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டு இருக்கிறார். ஆனால், திரெளபதி முர்மு-விற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் கூட்டணியில் இல்லாத பல கட்சிகள் கூட போட்டி போட்டுக் கொண்டு திரெளபதியை ஆதரிக்க முன்வந்து இருக்கிறார்கள். இதனால், யஷ்வந்த் சின்ஹா-வின் வெற்றி வாய்ப்பு பெரும் கேள்விக் குறியாக மாறி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அண்ணல் அம்பேத்காரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கார் கூறியிருப்பதாவது;
பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் திரெளபதியை ஆதரிக்க முன்வந்து இருக்கின்றனர். எனவே, யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் தேர்தலில் இருந்து உடனே வாபஸ் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். திரெளபதி, வெற்றி பெற்றால் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் நாட்டின் மிக உயரிய பொறுப்பை அலங்கரிப்பார் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க. தலைவர் திருமாவளவன், யஷ்வந்த் சின்ஹாவிற்கு தான் எங்களது ஓட்டுக்கள் என கூறி வரும் இவ்வேளையில், அம்பேத்கார் பேரனின் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.