பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பக்கம் என்றும் துணை நிற்பேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) மற்றும் எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் மீது பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுதல், இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்தல், பயங்கரவாத பயிற்சி அளித்தல், தேசத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அமைப்பு (என்.ஐ.ஏ.) ஆங்காங்கே சோதனை நடத்தி, அவ்வப்போது சிலரை கைது செய்து வந்தது.
அந்த வகையில், என்.ஐ.ஏ. அமைப்பு அண்மையில் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது. இந்த, சோதனை தமிழகத்திலும் நடைபெற்றது. இதில், பி.எஃப்.ஐ. அமைப்பை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ.வின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதவிர, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இச்சம்பவம், தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். மேலும், மிகப்பெரிய அளவில் கோவை மாவட்டத்தில் போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து, பெட்ரோல் குண்டு வீசியவர்களை தமிழக காவல்துறை கைது செய்ய துவங்கியது. பி.எஃப்.ஐ. அமைப்பினரின் காட்டுமிராண்டி தனத்திற்கு, பொதுமக்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் வரை கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். மேலும், பி.எஃப்.ஐ. அமைப்பிற்கு தொடர்ந்து ஆதரவாக பேசி வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2017 – ஆம் ஆண்டு பி.எஃப்.ஐ. அமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட திருமாவளவன் இவ்வாறு பேசியிருக்கிறார் ;
இந்தியாவில் பா.ஜ.க.வா, காங்கிரஸா என்ற போட்டி மாறி, இன்றைக்கு ஆர்.எஸ்.எஸா. பி.எப்.ஐ.யா என்ற போட்டி உருவாகி இருக்கிறது. வெளிப்படையாக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடையே யுத்தம் வெளிப்படையாக துவங்கி விட்டது. விடுதலை சிறுத்தைகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பக்கம் நிற்கும். இந்த கருத்தில் என்றும் துணை நிற்போம் என திருமா பேசியுள்ளார்.
பி.எஃப்.ஐ. அமைப்பால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு ஆறுதல் கூறாமல், அடிப்படைவாத அமைப்பிற்கு திருமாவளவன் தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, என்.ஐ.ஏ. அமைப்பினர் திருமாவளவனிடமும் தீவிர விசாரணை செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.