இன்று பெரியார் இருந்திருந்தால் தி.மு.க. இருந்திருக்காது!

இன்று பெரியார் இருந்திருந்தால் தி.மு.க. இருந்திருக்காது!

Share it if you like it

எதற்கெடுத்தாலும் பெரியார் பெரியார் என்கிறார்கள். இன்று மட்டும் பெரியார் இருந்திருந்தால் தி.மு.க. என்கிற கட்சியே இருந்திருக்காது என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்பிரமணிய சுவாமி கூறியிருக்கிறார்.

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமியின் பிறந்தநாள் விழா விராட் இந்துஸ்தான் சங்கம் சார்பில் மதுரையில் நடந்தது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. நமது நாட்டின் கலாசாரத்தை ஆங்கிலேயர்கள் அழித்ததால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கினோம். தற்போது அதிலிருந்து மீண்டு சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். ஆங்கிலேயர்கள்தான் திராவிடன், ஆரியன் என்று பிரிவினையை உண்டாக்கினார்கள். திராவித் என்பதற்கு 3 கடலும் சங்கமிக்கும் இடம் என்று அர்த்தம். இதுதான் திராவிடமாக மாறியது. தமிழன் மூளையில் நம்பர் ஒன்னாக இருக்கிறான். ஆனால், தைரியம் இல்லாதவன்.

தி.மு.க. தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது. அடுத்த சட்டமன்றத்தில் பா.ஜ.க. மாற்றுக் கட்சியாக இருக்கும். 4 வர்ணம் என்பது ஒன்றுமில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் ஒரே டி.என்.ஏ.தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி கற்றுக்கொண்டால் என்ன தவறு. ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்புவர்களை ஏன் தடுக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன். தி.மு.க.வினர் எதற்கெடுத்தாலும் பெரியார், பெரியார் என்று கூறுகிறார்கள். இன்று பெரியார் இருந்திருந்தால் தி.மு.க.வே இருந்திருக்காது என்பதுதான் உண்மை. பெரியார் என்ற ராமசாமி நாயக்கருக்கு ஈரோட்டில் அவருடைய அப்பா கோயில் கட்டிக் கொடுத்து, மகன் ராமசாமி பராமரிப்பார் என்று உயில் எழுதி வைத்தார். மேலும், கோயிலை முறையாக பராமரித்ததற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றிருக்கிறார் பெரியார். இது கி.வீரமணிக்கு தெரியுமா? வீரமணி இருக்கிறாரா அல்லது ஓடிப் போய்விட்டாரா?

கோயில்களில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் போட்டிருக்கிறார்கள். நமது சட்டப்படி எந்தக் கோயிலிலும் அரசு அதிகாரம் செலுத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 32,000 கோயில்கள் தி.மு.க. அரசு கட்டுப்பாட்டில் இருப்பதை விடுதலை செய்ய வேண்டும். கோயிலைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? உண்டியல் பணத்தை எடுக்கத் திட்டமிடுகிறார்கள். எல்லா கோயில்களையும் கையில் எடுத்து அர்ச்சகர்களை நியமிக்கிறார்கள். அதை மாற்றி எல்லாக் கோயில்களையும் சட்டப்படி மீட்டெடுத்து, பூசாரிகள் கையில் கொடுப்பேன். அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு தமிழகத்துக்கு அடிக்கடி வந்து தி.மு.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும்” என்றார்.


Share it if you like it