திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்துக்காக, தாசில்தாருக்கு இருக்கை கொடுக்காமல் அவமதித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு இதுதான் தி.மு.க. ஜாதியை ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டிய லட்சணமா என்று கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவிலுள்ள ஈக்குவார்பாளையம் ஊராட்சியில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொன்னேரி கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியின், தாசில்தார் கண்ணன், துணை தாசில்தான் ஜெயச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் உஷா ஸ்ரீதர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில்தான், தாசில்தார் கண்ணன் அவமதிக்கப்பட்டிருக்கிறார். அதாவது, நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., ஊராட்சி மன்றத் தலைவர், அவ்வளவு ஏன் துணை தாசில்தாருக்குக் கூட இருக்கை போடப்பட்டிருந்தது. ஆனால், தாசில்தார் கண்ணனுக்கு இருக்கை போடப்படவில்லை. இதனால், தாசில்தார் கண்ணன் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரமாக நின்று, ஏதோ பார்வையாளரைப் போல நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். அதேபோல, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்போதுகூட தாசில்தார் கண்ணனை, அழைத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள். இவை அனைத்தும் காரணம், தாசில்தார் கண்ணன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதானாம்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை எதற்கெடுத்தாலும் சமூகநீதி, சமூகநீதி என்று குரல் கொடுப்பது வழக்கம். ஆனால், தி.மு.க. நிகழ்ச்சிகளிலேயே சமூக நீதி கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதுதான் வேதனை பிளஸ் வேடிக்கை. அவ்வளவு ஏன், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைக் கூட தி.மு.க. அமைச்சர்கள் தங்களது வீட்டிலுள்ள ஷோபாவில் உட்கார அனுமதிக்காமல், பிளாஸ்டிக் சேர் போட்டு அமரவைப்பது வழக்கமாக இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. இந்த சூழலில், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக தாசில்தாருக்கு இருக்கை கொடுக்காத விவகாரம், பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு இதுதான் தி.மு.க. ஜாதியை ஒழித்து சமூகநீதியை நிலைநாட்டிய லட்சணமா என்று கொந்தளிக்கிறார்கள்.