திருவண்ணாமலையில் லாக்கப் மரணத்தை மறைக்க போலீஸார் 7 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக கூறப்படும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே இருக்கிறது தட்டரணை கிராமம். இங்கு பழங்குடி குறவர் இனத்தைச் சேர்ந்த 120 பேர் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த 26-ம் தேதி தட்டரணை கிராமத்துக்குச் சென்ற மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார், சாராயம் காய்ச்சி விற்றதாகக் கூறி தங்கமணி என்பவரை அழைத்து வந்திருக்கிறார்ள். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். மறுநாள் காலையில் தங்கமணியின் உறவினர்களுக்கு போன் செய்த போலீஸார், அவருக்கு திடீரென வலிப்பு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். பிறகு, மீண்டும் மாலையில் போன் செய்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தங்கமணி, உயிரிழந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் திருவண்ணாமலை மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில், பொய் வழக்கு பதிந்து தங்கமணியை சிறையிலடைத்ததாகவும், காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலேயே தங்கமணி உயிரிழந்ததாகவும், ஆகவே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக குற்றம்சாட்டி தங்கமணியின் உறவினர்கள் நேற்று சென்றனர். ஆனால், அவர்களை உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர். இதனால், ஆத்திரமடைந்த தங்கமணியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகு, சுமார் 1 மணி நேரம் கழித்து ஒரு சிலரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதித்திருக்கிறார்கள். அவர்களும் கலெக்டரிடம் சென்று நடந்த விவரங்களைக் கூறி, மனுவை கொடுத்து விட்டு வந்திருக்கிறார்கள். இச்சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில்தான், தங்கமணியின் லாக்கப் மரணத்தை மறைக்க, அவரது குடும்பத்தினரிடம் 7 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சித் தகவலை கூறியிருக்கிறார் அவரது மகன் திருமூர்த்தி. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “எங்களது அப்பா இறந்ததிலிருந்து 2 நாட்களாக போலீஸார் என்னை தூங்கவிடவில்லை. எனது தந்தையின் லாக்கப் மரணத்தை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொல்லி என்னிடமும், எனது குடும்பத்தினரிடமும் பேரம் பேசினார்கள். முதல் நாள் 2 லட்சத்தில் தொடங்கிய பேரம் படிப்படியாக வந்து 7 லட்சம் ரூபாயில் முடிந்தது. டி.எஸ்.பி. அண்ணாதுரை, தாணிப்பாடி எஸ்.ஐ. முத்துக்குமாரசாமி உட்பட நான்கைந்து பேர் வந்து பேரம் பேசினார்கள். மேலும், எனது தந்தை தங்கமணியின் உடலை வாங்கிச் சென்று அடக்கம் செய்யும்படியும், தேவையில்லாமல் பிரச்னை செய்து போலீஸை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்றும் மிரட்டும் தொணியில் கூறினார்கள்” என்று சொல்லி இருக்கிறார்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கும் 2-வது லாக்கப் மரணம் இது. ஏற்கெனவே கஞ்சா விற்றதாகக் கூறி கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை, கெல்லீஸ் சிக்னல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைச் செயலக காலனி போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால், மறுநாள் விக்னேஷ் வலிப்பு வந்து இறந்து விட்டதாகக் கூறினார்கள். இவரது சாவிலும் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். மேலும், இவரது லாக்கப் மரணத்தையும் மறைக்கும் வகையில், அவரது குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார்கள். இந்த பணத்தை அக்குடும்பத்தினர் நீதிபதியிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. ஆக, மொத்தத்தில் திராவிட மாடல் ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகள் எல்லாம் அரங்கேறப் போகிறதோ என்று அங்கலாய்க்கிறார்கள் பொதுமக்கள்.