போதையால் சீரழியும் தமிழகம்… 2 வயது குழந்தை பலி… போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

போதையால் சீரழியும் தமிழகம்… 2 வயது குழந்தை பலி… போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

Share it if you like it

மது போதையில் இளைஞர் ஒருவர் ஆற்றுக்குள் வண்டியை விட 2 வயது ஆண் குழந்தையின் உயிர் அநியாயமாக பறிபோயிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரடிக் சாம்சன். இவர், கடந்த 19-ம் தேதி இரவு விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் ஸ்டாலின் மகன் 2 வயது ரோஜரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். வீரசோழன் ஆற்றுக்கட்டு கரையில் உள்ள அரசு மதுபானக் கடையில், குழந்தை வைத்துக் கொண்டே மது அருந்தி இருக்கிறார். பின்னர், இரவு வீடு திரும்பியபோது போதையில் வண்டியை ஆற்றுக்குள் விட்டு விட்டார்.

சிறிது நேரத்தில் சாம்சன் மட்டும் நீச்சல் அடித்து கரையேறி விட்டார். குழந்தை ரோஜரை காணவில்லை. தகவலறிந்து உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். பின்னர், இதுகுறித்து போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் தேடியபோது, குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்து 4 நாட்களான நிலையிலும், சாம்சன் மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும், இன்று காலை திருவிடைமருதூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், திடீரென கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாம்சன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடியால் தமிழகம் எப்படியெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் உதாரணமாகும்.


Share it if you like it