ஜாதி பெயரை சொல்லி திட்டியதால் மனமுடைந்த தூய்மைப் பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்குக் காரணமாக மாஜி பேரூராட்சித் தலைவி ஆயிஷாவை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி புதுக்காலனியைச் சேர்ந்தவர் சுடலைமாடன். உடன்குடி பேரூராட்சியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக தூய்மைப் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். ஆகவே, பணி மூப்பு அடிப்படையில் தனக்கு நிரந்தர மேற்பார்வையாளர் பணி வழங்கும்படி, உடன்குடி பேரூராட்சித் தலைவி ஹிமைரா ரமீஸின் பாத்திமாவுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதற்கு, பேரூராட்சி தலைவியின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவியுமான ஆயிஷா கல்லாசி, பணி நிரந்தரம் செய்ய சுடலைமாடனிடம் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் சுடலைமாடனோ, லஞ்சம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆயிஷா, ஜாதியை சொல்லி சுடலைமாடனை திட்டியதோடு, பணி நிரந்தரம் செய்யவும் மறுத்துவிட்டாதகக் கூறப்படுகிறது. மேலும், சுடலைமாடனை சாக்கடையை சுத்தப்படுத்த நிர்பந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுடலைமாடன், கடந்த 17-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் சுடலைமாடனை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், கடந்த ஒரு வார காலமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையறிந்த உடன்குடி பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், பேரூராட்சித் தலைவர் ஹிமைரா ரமீஸின் பாத்திமாவின் மாமியார் ஆயிஷா கல்லாசின் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கூறியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடந்த 18-ம் தேதி பேரூராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, தகவலறிந்த தூய்மைப் பணி தேசிய ஆணையத் தலைவர் ம.வெங்கடேசன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுடலைமாடனை நேரில் சென்று பார்வையிட்டதோடு, நடந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாஜி பேரூராட்சி தலைவி ஆயிஷா மீதும், அவரது தலையீடை அனுமதித்த பேரூராட்சி தலைவி ஹிமைரா மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுடலைமாடன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, வன்கொடுமைச் சட்டம் மற்றும் கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைத்திருக்கிறார்கள். தனிப்படை போலீஸார் ஆயிஷாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர். தூய்மைப் பணியாளரை ஜாதிச் சொல்லி திட்டயதால், தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.