திருநெல்வேலியில் மாணவியை காதலித்து திருமண ஆசைகாட்டி உல்லாசமாக இருந்து விட்டு, திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய சி.எஸ்.ஐ. பாதிரியாரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி ஆயுதப்படை போலீஸ் மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் இன்பராஜ் மகன் மில்டன் கனகராஜ். 26 வயதாகும் இவர், இறையியல் படிப்பு முடித்துவிட்டு கே.டி.சி. நகரிலுள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பயிற்சி பாதிரியாராக இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் மற்றொரு குடும்பம் வசித்து வருகிறது. இவர்களது மகள் அப்பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசிப்பதால், மில்டன் கனகராஜுக்கும், அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறி இருக்கிறது.
இதையடுத்து, கடந்த 2 வருடங்களாக இருவரும் நெருங்கி பழகி வந்திருக்கிறார்கள். அப்போது, அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பலமுறை உல்லாசமாக இருந்திருக்கிறார் மில்டன் கனகராஜ். இதனிடையே, பாதிரியார் மில்டன் கனகராஜுக்கு, அவரது பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதையறிந்த அந்த மாணவி, நேராக மில்டன் கனகராஜ் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டிருக்கிறார்.
அப்போது, மில்டன் கனகராஜ் அந்த மாணவியை அவதூறாகப் பேசியதோடு, எரித்துக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து அந்த மாணவி, திருநெல்வேலி தாலுகா போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து மில்டன் கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், காதலிப்பதாகக் கூறி மாணவியை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.