பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மட்டம் வீக்கு என்ற நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியை விஞ்சும் வகையில், வாணியம்பாடியில் கட்டப்படும் அங்கன்வாடி மைய கட்டடம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது வளையாம்பட்டு ஊராட்சி. இங்கு ஏற்கெனவே இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. எனவே, அக்கட்டத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய நிலையில், புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடத்தின் அடித்தளம் மற்றும் தூண்கள் சாதாரணமாகவே கைகளால் பெயர்த்து எடுக்கும் வகையில், மிகவும் தரமற்ற முறையிலும், தரமற்ற பொருட்களைக் கொண்டும் கட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றசாட்டி வருகின்றனர். மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடத்தின் அடித்தளத்தை கைகளால் பெயர்த்து எடுக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த அங்கன்வாடி மையம் குழந்தைகள் படிப்பதற்காக கட்டப்படுவதால் தரமற்ற முறையில் பொருட்களை வைத்து கட்டுவது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அங்கன்வாடி கட்டட பணியை ஆய்வு செய்து, கட்டடத்தை முழுமையாக அகற்றிவிட்டு தரமான பொருட்களை வைத்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.