திருப்பூர் மாவட்டத்தில் பிணத்தை கொண்டு வந்து நடத்தப்படும் ஜெபக்கூடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது செம்பியநல்லுார் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட நேரு நகரில் கிறிஸ்தவர்களின் ஜெபக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் வெளியூரிலிருந்து ஏராளமானோரை அழைத்து வந்து ஜெபக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஜெபக்கூடத்தில் மதம் மாற்றம் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் செய்து அளித்து வருகின்றனர். இந்த சூழலில், சமீபகாலமாக வெளியூரில் இறந்தவர்களின் சடலங்களை இந்த ஜெபக்கூடத்துக்கு கொண்டு வந்து ஜெபம் செய்து, இறுதிச் சடங்குகளை முடித்த பின்னர், மீண்டும் அந்த பிணங்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இது அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் இருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து, நேரு நகரில் வசிக்கும் தியாகராஜன் என்பவர், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி, இதுகுறித்து அவிநாசி போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், மேற்கண்ட இடத்தில் அனுமதியின்றி கட்டடம் கட்டியதும், உரிய அனுமதி பெறாமல் ஜெபக்கூடமாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மேற்படி விவகாரம் தாசில்தார் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக, அவிநாசி தாசில்தார் ராஜேஷ் தலைமையில், செப்டம்பர் 7-ம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, பிரார்த்தனை நடத்த ஜெபக்கூடத்தை பயன்படுத்தக் கூடாது என்று தாசில்தார் தடை விதித்து உத்தரவிட்டார். ஆனால், தாசில்தார் உத்தரவுக்குப் பிறகு, கடந்த 2 வாரங்களாக முன்பைவிட அதிக அளவில் ஆட்கள் வரவழைக்கப்பட்டு, ஜெபக்கூடத்தில் பிரார்த்தனை நடந்து வருகிறது.
எனவே, நேரு நகர் குடியிருப்பில் உள்ள பொதுமக்கள், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, ஜெபக்கூடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், தங்களது வீடுகளில் பக்திப் பாடல்களை ஒலிபரப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பிரியா என்பவர் கூறுகையில், “இந்த ஜெபக்கூடத்துக்கு வெளியூர்களில் இறந்தவர்களின் சடலங்களை கொண்டு வந்து ஜெபம் செய்து இறுதிச் சடங்குகளை செய்கிறார்கள். பின்னர், அந்த சடலங்களை எடுத்துச் சென்று தங்களது ஊர்களில் அடக்கம் செய்கிறார்கள். இதனால், குழந்தைகள் வெளியில் வரவே பயப்படுகின்றனர். இது எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும், ஜெபக்கூட்டத்திற்கு வருபவர்கள் பெண்களை இழிவாகப் பேசுகிறார்கள். மேலும், ஹிந்து கடவுள்களையும் இழிவுபடுத்துகின்றனர். இதுகுறித்து போலீஸ், தாசில்தார், கலெக்டர் என பலரிடமும் மனு கொடுத்தோம். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆகவே, ஜெபக்கூடத்துக்கு எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, அமைதியான வழியில் போராடி வருகிறோம்” என்றார்.