திருப்பூரில் பானிபூரி கடைக்காரர் உட்பட சாலையோர வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்களிடம் கூட தினசரி 50, 100 ரூபாய் என தி.மு.க. கவுன்சிலரின் கணவர் வசூலித்து வருவதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சாலையோர வியாபாரிகள் யாரிடமும் மாமூல் வசூல் செய்தது கிடையாதாம். மேலும், 2016-ல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், கவுன்சிலர்களின் தொல்லையும் இல்லாமல் இருந்தது. இதனால், சாலையோர வியாபாரிகள் மாமூல் தொல்லை இன்றி வழக்கம்போல கிடைக்கும் வருமானத்தை முழுமையாக வீடுகளுக்கு கொண்டு சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்தி வந்தனர். ஆனால், 2021-ல் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் தி.மு.க.வே மொத்தமாக வாரிச்சுருட்டியது.
அதேபோல, நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் பெரும்பாலானவற்றை தி.மு.க.வே கைப்பற்றியது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் தி.மு.க.வினர் வைப்பதே ராஜ்ஜியமாக இருந்து வருகிறது. ஆகவே, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளைக்கூட விட்டு வைக்காமல் தி.மு.க. கவுன்சிலர்கள் மாமூல் வசூலித்து வருவதாக புகார் எழுந்து வருகிறது. இந்த சூழலில்தான், திருப்பூர் மாநகராட்சியில் தி.மு.க. கவுன்சிலரின் கணவர் ஒருவர், பானிபூரி கடைக்காரரிடம் மாமூல் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஆ.சுபத்ராதேவி. இவரது கணவர் ஆனந்தன். இந்த 40-வது வார்டுக்கு உட்பட இடுவம்பாளையம் பகுதியில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் கடை போட்டிருக்கிறார்கள். இவர்களிடம் தினசரி 50 முதல் 100 ரூபாய் வரை மாமூல் வசூலித்து வருகிறாராம் தி.மு.க. கவுன்சிலர் சுபத்ராதேவியின் கணவர் ஆனந்தன். இவருக்கு தி.மு.க.வைச் சேர்ந்த கராத்தே மணி என்பவர்தான் ரைட் அண்ட் லெப்ட் என்கிறார்கள். இந்த சூழலில், பானிபூரி கடை வைத்திருக்கும் ஒருவர், மாமூல் தரமறுத்துவிடவே, அவரை கடை போடக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார் ஆனந்தன். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, ஆனந்தனின் அராஜகத்தை கண்டித்து, அப்பகுதியில் வசிக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், ஆனந்தன் பானிபூரி கடைக்காரரை மிரட்டியது பற்றி சமூக வலைத்தளில் பதிவு வெளியிட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தனும், கராத்தே மணியும், பா.ஜ.க.வைச் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி இருக்கிறார்கள். இந்த ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இதைக் கேட்டுவிட்டு தி.மு.க.வினரின் அராஜகத்துக்கு அளவே இல்லையா என்று கொந்தளித்து வருகிறார்கள் பொதுமக்கள்.