திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை: ஆசிப், ஆசாத் கைது!

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை: ஆசிப், ஆசாத் கைது!

Share it if you like it

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், ஆசாத் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை நடந்தது. திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10-வது தெரு, பெரியார் அரசு பேருந்து பணிமனை, போளூர் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் இருந்த ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மையங்கள் மற்றும் கலசப்பாக்கத்தில் இந்தியா ஒன் ஏ.டி.எம். மையம் ஆகியவற்றில் பணம் எடுக்கும் இயந்திரங்களை கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் வெட்டி, அவற்றிலிருந்த 72.78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேற்படி கொள்ளையில் ஈடுபட்டது வட மாநில கொள்ளையர்கள் என்பது சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் உறுதியானது. மேலும், கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன்பு, கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையங்களை நோட்டமிட்ட காட்சிகளும் போலீஸாருக்கு கிடைத்தன. அதோடு, இக்கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதும், கொள்ளை கும்பல் ஆந்திர மாநிலம் வழியாக கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள கோலார் தங்க வயல் பகுதிக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, கொள்ளையர்களை பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீஸார் கர்நாடகா, குஜராத், ஹரியானா மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், கே.ஜி.எஃப். பகுதியில் குற்றவாளிகளை தங்கவைத்த நபரை போலீஸார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், கொள்ளை கும்பல் ஹரியானா மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஹரியானா மாநிலத்துக்கு விரைந்த தனிப்படை போலீஸார், மேவாத் பகுதியைச் சேர்ந்த ஆசிப் மற்றும் ஆசாத் ஆகியோரை கைது செய்தனர்.

தற்போது, சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட இக்கொள்ளையர்கள், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து, இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் போலீஸார். மேலும், இக்கொள்ளை சம்பவத்திற்கு எவ்வாறு திட்டங்கள் தீட்டப்பட்டது? இக்கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் வேறு நபர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share it if you like it