இன்று திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள். அடியேனின் ஆசான் மகாவித்வான் வே.சிவசுப்பிரமணிய ஐயர் அவர்கள். அவருடைய ஆசான் வாகீசகலாநிதி கி.வா.ஜெகந்நாத ஐயர் அவர்கள் .அவருடைய ஆசான் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் .அவருடைய ஆசான் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் .ஆக,திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் அடியேனின் ஆசானுக்கு ஆசான்.
இப்பதிவில், திரு. வ.மு.முரளி அவர்கள் எழுதிய ( பத்திரிகையாளர் ) “குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவர்” என்னும் கட்டுரையையும் திரு. ம.வெ.பசுபதி அவர்கள் எழுதிய ” சாலப் பெரிய ஆசிரியர்பிரான்!”என்னும் கட்டுரையையும் திரு.அசோகமித்திரன் அவர்கள் எழுதிய ” மாணாக்கனைக் கவர்ந்த ஆசான்.”என்னும் கட்டுரையையும் அன்பர்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன்.
“குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவர்”
வ.மு.முரளி அவர்கள்.
திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)
‘தமிழ்த் தாத்தா’ உ.வே. சாமிநாதையரை அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால், அந்த மேதையை உருவாக்கிய மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை தமிழகம் உரிய அளவில் இன்னமும் அறியவில்லை.
பிள்ளையின் சிறப்பு, அவர் இயற்றிய நூல்களால் அமையவில்லை. ஆனால், அவரது குருகுல மாணாக்கர்களாக இருந்த பலர் தமிழுக்கு ஆற்றிய தொண்டே குருநாதரை இன்றும் நினைக்கச் செய்கிறது. அவர்களுள் ஒருவர்தான் உ.வே.சா.
திருவாவடுதுறை ஆதீனத்தால் “மகாவித்துவான்’ என்ற பட்டம் பெற்று புகழ்பெற்ற மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழில் கரை கண்டவர்; நினைத்தவுடன் யாப்புடன் கூடிய கவி புனையும் ஆற்றல் மிகுந்தவர். தனது வாழ்நாளில் அவர் எழுதிய செய்யுள்களின் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்கிறார் உ.வே.சா.
ஆனால், அக்காலத்தில் அவற்றைத் தொகுத்து வைக்க போதிய சாதனங்கள் இல்லை. அதையும் மீறி, அவருடைய நூல்கள் பலவற்றை உ.வே.சா.வின் முயற்சியால் நாம் இன்று படிக்க முடிகிறது. அவர் எழுதிய சேக்கிழார் பிள்ளைத்தமிழும், குசேலோபாக்கியானம் என்ற காப்பியமும், அவரது மேதைமைக்குச் சான்றாக விளங்குகின்றன. தலபுராணத்திலும் தமிழின் சிறப்பு மிளிரச் செய்வதில் பிள்ளை முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் எழுதிய தலபுராணங்கள் 22.
தனது அருமுயற்சியால் கற்ற தமிழைத் தன்னுடைய மாணாக்கர்களுக்கு அள்ளி வழங்கும் திறனால் இவரது புகழ் பரவியது. இவரது வீடே மாணாக்கர்களின் இல்லமானது. பிரதிபலன் பாராமல் மாணவர்களுக்கு உணவும் இருப்பிடமும் அளித்து, தமிழ்க் கற்பிப்பதைத் தனது வாழ்வின் நோக்கமாகவே கொண்டு வாழ்ந்தவர். தன்னுடைய மாணாக்கர்களின் தரத்தை உயர்த்துவதே அவரது இலக்காக இருந்தது. நல்ல மாணாக்கர்களைத் தேடிக் கண்டறிந்து பாடம் கற்பிப்பது பிள்ளையின் இயல்பு.
“பணத்துக்கு அடிமையாக இராமல் பணத்தை இவர் அடிமையாக்கினார். எவ்வளவு வறிய நிலையில் இருந்தாலும் தம் கொள்கைக்கு விரோதமான எதையும் செய்யாத வீரம் இவர்பால் இருந்தது. இவர் நினைத்திருந்தால் எவ்வளவோ செல்வத்தைப் பெற்றுப் பின்னும் சிறந்த நிலையில் இருந்திருக்கலாம். உள்ளதே போதுமென்ற திருப்தியே அத்தகைய முயற்சிகளில் இவரைச் செலுத்தாமல் இருந்தது” என்கிறார் உ.வே.சா.
தன் குருநாதரின் சிறப்புகள் குறித்து உவே.சா., 1934-இல் எழுதிய ‘ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்ற நூல் பிள்ளையின் தவ வாழ்வை விளக்குகிறது.
“மாணாக்கர்களிடம் இவர் தாயைப் போன்ற அன்புடையவராக இருந்தார். அவர்களோ தந்தையாகவே எண்ணி இவரிடம் பயபக்தியுடன் ஒழுகினர். அவர்களுடைய குற்றங்களை இவர் மறந்துவிடுவார். அவர்களுக்கு எந்த எந்த வகையில் குறைகள் உண்டோ அவற்றை நீக்குவதற்காக முயல்வார்; அவர்கள் தெரிந்து கொள்ளாதபடி அவர்களுக்கு நன்மைகளைச் செய்வார். மாணாக்கர்களேயன்றிப் பிறர் சுற்றத்தாரல்லர் என்பது இவருடைய வாழ்வின் நோக்கமாக இருந்தது” என்று, தனது வாழ்வின் அரிய ஆறு ஆண்டுகளை பிள்ளையின் இறுதி நாள்களில் அவருடன் கழித்த உ.வே.சா. கூறியுள்ளார்.
இன்றைய ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் கவனித்துப் பின்பற்ற வேண்டிய அற்புதமான வாழ்க்கை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையினுடையது. குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவரான இவரின் நினைவைப் போற்றுவது தமிழரின் – தமிழகத்தின் கடமையாகும்.
கட்டுரையாளர் =
திரு. வ.மு.முரளி, பத்திரிகையாளர்.
இக்கட்டுரை, தினமணி- தமிழ்மணியில் வெளியானது.
சாலப் பெரிய ஆசிரியர்பிரான்!
-ம.வே.பசுபதி
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
திரிசிரபுரம் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)
அழகோ அழகு; அவ்வளவு பேரழகு, தான் பெற்றெடுத்த தகத்தகாயத் தங்கக் குழந்தைகள்! அந்தக் குழந்தைகளைச் சற்றும் தயக்கமின்றி முழு மனதுடன், பெற்றெடுத்த பெருமகனாரே தானமாகக் கொடுத்துவிட்டாரென்றால் அந்த அதிசய மனிதரைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்
கற்பனைகள், வர்ணனைகள், நீதிகள், நியதிகள் என அனைத்தும் கருக்கொண்டு, சொற்கட்கு இலக்கண அமைதிகளுடன் உருக்கொண்டு, ஓர் இலக்கியம் வெளிப்படுவது மகப்பேற்றுக்கு ஒப்பானது. சொல்லணி, பொருளணிகளை அணிவித்துத் தன் படைப்பைக் காணும் கவிஞனின் நிலை, நல்ல தாய் அடையும் மகிழ்ச்சியைக் காட்டிலும் நல்லதாய் அமையும்.
காரணம் தாய் பெறும் குழந்தை பிரம்மப் படைப்பு; அதற்கு ஆயுள் வரையறை உண்டு. கவிஞனின் இலக்கியக் குழந்தை கலைமகள் படைப்பு; அதற்கு ஆயுள் வரையறை இல்லை; அழிவதில்லை. “மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வதுபோல் மாயா; புகழ் கொண்டு மற்றுஇவர் செய்யும் உடம்பு’ – என்பது குமரகுருபரரின் திருவாக்கு.
குசேலோபாக்கியானம், சூதசம்ஹிதை என்னும் மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்புகளை உருவாக்கி, “இவற்றை உங்கள் பெயரில் வெளியிட்டுக் கொள்ளுங்கள்” என்று வல்லூர் தேவராசப் பிள்ளைக்குக் கொடுத்தவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. வல்லூரார் “வேண்டாம்’’ என மறுத்தார். மகாவித்துவான் வற்புறுத்தித் திணித்தார்.
மகாவித்துவான் எப்பொழுது இந்த இலக்கியக் கொடை கொடுத்தார் என்பதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது. வல்லூர் தேவராசப் பிள்ளையின் அழைப்பின்பேரில் மகாவித்துவான் பெங்களூருக்குச் சென்று சில காலம் தங்கியிருந்து அவருக்கும் பிறருக்கும் சில நூல்களைப் பாடம் சொன்னார்.
பின்னர் திருச்சிக்கு மீள் பயணம் மேற்கொண்ட நாளில், மகாவித்துவானைப் பிரிய மனமின்றித் தவித்த தேவராசர், மரியாதை நிமித்தமாக ஐயாயிரம் ரூபாய் காணிக்கை செய்தார். அன்றைய ஐயாயிரம் இன்றைய கோடிக்குச் சமமென்றே சொல்லலாம்.
நமக்கு இவ்வளவு அதிகமான செல்வமா என மகாவித்துவானின் மனம் மறுதலித்தது. “காணிக்கை’ என்று சொல்லிக் கொடுத்துவிட்டதால் மறுக்க முடியவில்லை! அதனினும் மேலான குருவின் வாழ்த்தளிப்பாக, இலக்கியங்களை வழங்கினார். மகாவித்துவானே வென்றார்.
தமிழில் 11,661 செய்யுள்கள் செய்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பரே. அவற்றில் 1,293 பாடல்களை “மிகைப்பாடல்கள்’ என்று தனிமைப்படுத்துவதும் உண்டு. அப்படி ஒதுக்கினாலும் 10,368 பாடல்கள் கம்பர் இயற்றியவையே என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
தமிழில் நூறாயிரம் செய்யுள்கள் செய்தவர் மகாவித்துவான். இதனால் இவரைப் பத்துக் கம்பர் என்று குறிப்பிடலாம். இதுவரை அச்சில் வெளிவந்துள்ள மகாவித்துவானின் பிரபந்தங்கள், புராணங்கள், சரித்திரச் செய்யுள் நூல்கள் முதலியன மொத்தம் 75
மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு நேரம் காலமே கிடையாது. எந்த நேரத்திலும் எந்தப் பணியின் ஊடேயும் பாட போதனை நடைபெறும். நள்ளிரவில் மாணவர்களை அழைத்து “திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி’யைப் பாடம் சொன்ன வரலாறும் உண்டு.
வெளியூர்களில் இருக்கும்போது மாலை, இரவு நேரங்களில் அரங்கேற்றம் செய்வார். அன்றைய நாள் காலையில் இயற்றிய கவிதைகளை அவையினர் முன்னே சொல்லி நயங்களுடன் விளக்குவார். மகாவித்துவான் பத்துப் பதினைந்து நாள்கள் ஓர் ஊரில் தங்கினாரென்றால் ஆயிரம் பாடல்களுக்கு மேற்பட்டதான ஒரு தலபுராணம் உருவாகியிருக்கும். அல்லது சில சிற்றிலக்கியங்கள் உருவாகியிருக்கும்.
அவர், கவிதைகளை அதிவேகமாகவும் சொல்வதுண்டு. பல மணி நேரம் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பாடல்களைச் சொல்வதும் உண்டு. சொல்லச் சொல்ல எழுதுவதையே தொழிலாகக் கொண்ட சிலர் அக்காலத்தில் இருந்தனர். அவர்களை ஏடெழுதுவோர் அல்லது கையேட்டுப் பிள்ளை என்பர்.
ஓர் அவசரத் தேவைக்காக மகாவித்துவான் சொல்லும் பாடல்களை ஏட்டில் எழுத ஒருவர் நியமிக்கப்பட்டார். தன் தொழில் திறமையின் பேரில் அளவுக்கதிகமான நம்பிக்கை கொண்டவர் அவர். அதனால் அவரிடம் ஆணவப் பேச்சும் உண்டு.
“என் கை வலிக்கும்படி விரைவாகவும் அதிகமாகவும் கவிதை சொன்னவர் எவரும் இலர்” என்று ஒருநாள் அதிகாலையில் மகாவித்துவானின் மாணவர்களிடம் அவர் கூறினார்.
அன்று காலை ஏழு மணிக்கு மகாவித்துவான், நாகைக் காரோணப் புராணம் சுந்தர விடங்கப் படலக் கவிதைகள் சொல்லத் தொடங்கினார். கற்பனைச் சூறாவளிகளுடன் கவிமழை கனமழையாகப் பொழிந்தது. பகல் பத்து மணிக்குள் நீராடிப் பூசைக்குப் போவதை வழக்கமாகக் கொண்ட அவர், அன்றைக்குக் கவிதையில் ஒன்றிக் காலத்தை மறந்தார்.
பதினொரு மணியளவில், ஏடெழுதுபவரின் வலக்கரத்தில் ரத்தம் கட்டிவிட்டது. வலியைத் தன் மனவலிமையால் தாங்கிக் கொண்டு தவித்தபடியே எழுதினார். பன்னிரண்டு மணி ஆயிற்று. மகாவித்துவான் கவி சொல்வதை நிறுத்தவில்லை. ஏடெழுதுவோரின் தாங்கும் சக்தி விடைபெற்றுக் கொண்டது. எழுத்தாணியைக் கீழே வைத்தார். ஓலைகளை அடுக்கிக் கட்டி வைத்தார். மகாவித்துவானின் திருவடிகளில் விழுந்து வணங்கி “இனி என்னால் ஆகாது; என் ஆணவம் அடங்கிப் போயிற்று” என்று அலறினார்.
இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட கவிஞர்களும் தமிழறிஞர்களும், “கவி சொல்ல வல்ல நல்வித்தை” என்னும் சகலகலாவல்லிமாலையின் தொடருக்கு மகாவித்துவானே உரிய உதாரணம் என்று கைகூப்பித் தொழுதனர்.
பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கும் பழக்கம் இவரிடமில்லை. தன்னிடம் தமிழ்ப் படிக்க வந்த ஏழைகளுக்கு உணவு, உறைவிடம் அளித்து நுண்ணறிவுத் தமிழ்ப் புலமை கொடுத்த தனிப்பெரும் புலமைக் கொடையாளி இவரே. கவிதைகள் பாடிச் சன்மானமாகப் பெற்ற செல்வங்களைச் சேகரித்து வைத்து மயிலாடுதுறையில் தொள்ளாயிரம் ரூபாயில் இரண்டுகட்டு வீடு வாங்கி, மாணவர்கள் தங்கிப் படிக்க வசதி செய்து கொடுத்த கருணையாளர் இவர்.
அக்காலப் புலவர்களுக்கே உரிய வறுமையை ருசிக்கவும் செய்தார்; தமக்குக் கிட்டிய வளங்களைத் தமிழார்வலர்களுக்குச் செலவழித்து ரசிக்கவும் செய்தார்.
ஊடக வெளிச்சங்கள் இல்லாத அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ‘மகாவித்துவான், இந்தியா’ என்று மட்டும் முகவரி எழுதி லண்டனில் அஞ்சல் செய்யப்பட்ட கடிதம் மயிலாடுதுறையில் இருந்த இவரிடம் வந்து சேர்ந்ததென்றால், ‘இவரின் மிகுபெரும் புலமைத் தென்றல் உலகின் பல பாகங்களிலிருந்தோர்க்கும் இதமளித்தது’ என்பதுதானே பொருள்?
திருவாவடுதுறை ஆதீனம் இளைய பட்டம் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் நல்லாதரவு காரணமாகத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகரால் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டவர் இவர். இவரின் அளப்பரும் கவியாற்றலுக்கும் தமிழ் கற்பிக்கும் தனிப்பெரும் திறனுக்குமாக இவருக்கு மேற்படி சன்னிதானம் ‘மகாவித்துவான்’ என்னும் உச்சமான விருதை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
தக்கவருக்குத் தக்க காரணங்களால், தக்கதொரு பெரு நிறுவனம், தக்கதொரு பட்டத்தை வழங்கினால் மட்டுமே, அது அவரின் இயற்பெயரையும் தேவையற்றதாக்கி, என்றும் நிலைபெறும் என்பதற்கு மகாவித்துவானே சான்றானார். மகாவித்துவான் என்ற பட்டத்தைச் சொன்னால், திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற அவரின் திருப்பெயர் சொல்ல வேண்டிய தேவை எழுவதில்லையல்லவா?
மகாவித்துவான் படைப்புகளில் தமிழ்த் தொண்டுக்காகவே உருவாக்கிய பெருங்காப்பியப் படைப்பொன்றுண்டு. அப்படைப்பின் பெயர்தான் உ.வே.சா. தமிழ் இலக்கண, புராண, இதிகாச, சாத்திர, தோத்திர, கவித்துவம் ஆகிய அனைத்தியல்களிலும் நுண்மாண் நுழைபுலம் எய்துமாறு உத்தமதான புரத்து உத்தமரை உருவாக்கியவர் இவரே.
“மூலையிலே இருந்தாரை முன்றிற்கழைப்பவரே
சாலப் பெரியரென் றுந்தீபற”
-என்பதற்கேற்பச் சூரிய மூலையிலே உதித்த சுடர்க் கொழுந்தை, குன்றேறி ஒளிவிட வழிசெய்த ‘போதனைப் புனிதர்’ மகாவித்துவானே ஆவார்.
தம் குருநாதரின் சரித்திரத்தை விரிவாக எழுதி வெளியிட்டும், அவரின் நாற்பத்திரண்டு கவிதைப் படைப்புகளை இரு தொகுதிகளாக வெளியிட்டும் அவருக்குப் புகழஞ்சலி செய்த நன்மாணாக்கரும் உ.வே.சா.வே.
உ.வே.சாமிநாதய்யருக்கு மிகப் பிடித்த பேச்சு என்றால் மகாவித்துவானைப் புகழ்வதே. உ.வே.சா. பெற்ற புகழில் பெரும் பங்கு இந்த ஆசிரியப் பிரானின் திருவடிகட்கே உரியன.
இன்று நாம் மகாவித்துவானைப் பற்றிப் பேசுகிறோம், தெரிந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால் அதற்குக் காரணமும் அவரது மாணாக்கர் உ.வே.சா தான். ‘தமிழ்த் தாத்தா’ தனது குருநாதர் ‘மகாவித்துவான்’ மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் எழுதிப் பதிவு செய்திருக்காவிட்டால், நாம் அந்த மாமேதையைப் பற்றித் தெரிந்திருப்போமா என்பதே சந்தேகம்தான்.
ஆசிரியர்களால் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் உருவாக்கும் மாணவர்களால்தான் ஆசிரியர்கள் அறியப்படுகிறார்கள். இதற்கு மகாவித்துவானும் அவர் உருவாக்கிய மாணவரும்தான் எடுத்துக்காட்டு!
கட்டுரையாளர் =
திரு. ம.வே.பசுபதி, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் தலைவர்.
இக்கட்டுரை, தினமணி நாளிதழில் (06.04.2015) வெளியானது.
மாணாக்கனைக் கவர்ந்த ஆசான்.
-அசோகமித்திரன்
திரிசிரபுரம் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)
உ.வே. சாமிநாதய்யர் ஒரு பண்டிதர். ஆரம்ப முதலே தமிழ்ப் பெரியோரிடம் முறையாக முழு நேர மாணாக்கனாகக் கல்வி கற்றவர். அவருக்குத் தமிழைத் தவிர வேறெந்த மொழியும் தெரிந்திருக்க அவர் வாய்ப்பளிக்கவில்லை என்றே கூற வேண்டும்.
காலத்தால் குறைபட்ட, சிதையுண்ட பண்டைய தமிழ் இலக்கியப் பிரதிகள் அன்று அவரால் முடிந்த அளவு பூரணமாகவும் பொருள் பொதிந்ததாகவும் படிப்போர் ஓரளவு எளிதாக அணுகக்கூடிய முறையிலும் பதம் பிரித்தும் பதிப்பிக்கும் பணியே அவருக்கு முழு மனநிறைவு அளித்திருக்கிறது. அவருக்கிருந்த சிறு நண்பர் குழாமையும் அவருடைய பணியை ஒட்டியே அமைத்துக்கொண்டார். தமிழ் இலக்கிய ஆய்விலிருந்து வேறெந்த ஈடுபாடும் தன்னைப் பிரிப்பதற்கு அவர் இடம் தரவில்லை.
சாமிநாதய்யர் தன் வாழ்வின் இரண்டாம் பகுதியில்தான் சுயமாகப் படைக்கத் தொடங்குகிறார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு அவருக்கு ஒரு திருப்புமுனை. உண்மையில் அவர் சுயமாக எழுதிய சிறிய மற்றும் பெரிய உரைநடைப் படைப்புகள், அவர் சொல் சொல்லாகத் தேடி ஆராய்ந்து பொருள் அறிந்து பதிப்பித்த பண்டைய நூல்களைவிட ஏராளமானோர் அணுகி அனுபவிக்க வாய்ப்பளித்தன. இரு பத்திரிகைகள் குறிப்பாக இத்துறையில் பங்கேற்றன. ஒன்று கலைமகள். இன்னொன்று ஆனந்த விகடன். கலைமகள் அவரை ஆரம்ப முதலே சிறப்பாசிரியராகப் போற்றிப் பாராட்டியது. தீவிர அறிவாளிகள், விஞ்ஞானிகள் அப்பத்திரிகையின் ஆலோசகர்களாக இருந்ததால் சாமிநாதய்யரின் பங்கு வியப்பளிக்கக்கூடியதல்ல.
ஆனால் ஆனந்த விகடனின் இலக்கும் தன்மையும் கலைமகளிலிருந்து மாறுபட்டது. கலைமகள் மாத ஏடு. அது பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த அனைத்துமே நிதானமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டியவை. ஆனால் ஆனந்த விகடன் வார இதழ் பரபரப்பு, அன்றாடக் கவலைகள், அக்கறைகள், பிரச்சினைகளையே பிரதானமாகக் கொண்டது. பரவலான வாசகர்களை எட்டுவது அதன் முக்கிய இலக்காதலால் அது கொண்டிருக்கும் கதை, கட்டுரைகள் எளிமைப்படுத்தப்பட்டவை.
ஆனால் அத்தகைய இதழும் சாமிநாதய்யரைப் பங்கு கொள்ளவைத்தது. அவரும் எத்தரப்பினரும் மனத்தாங்கல் அடையாத விதத்திலும் அதே நேரத்தில் மொழி, பொருள் இரண்டும் உயர்ந்த மதிப்பீடுகளையே சார்ந்ததாகவும் இயங்கினார். இதை எழுதினோமே, இப்படி எழுதினோமே என்று அவர் சிறிதும் மனக் கிலேசம் அடைந்திருக்க வழியில்லை.
அய்யரவர்களுக்கு இரு ஆசான்கள். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இரண்டாவது, வித்துவான் தியாகராசச் செட்டியார். செட்டியார் அவர்கள்தான் அய்யரவர்களைக் கல்லூரியாசிரியராகப் பணியாற்றப் பாதையும் ஊக்கமும் தந்தவர்.
தியாகராசச் செட்டியாரே திருமணத்திற்குப் பின் கல்விக்கூடங்களில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரிசிரபுரத்தில் பட்டாளம் பகுதி என்று இன்றும் உள்ளது. திருச்சிக் கோட்டை அப்பகுதியைச் சேர்ந்ததுதான். பட்டாளத்தாருக்கு உள்ளூர் மொழிப் பரிச்சயம் ஏற்படத் தமிழ் கற்பிக்கப்பட்டது. தியாகராசச் செட்டியார் ஏற்றுக்கொண்ட மாதச் சம்பள ஆசிரியப் பணி அந்தப் பள்ளியில்தான். சம்பளம் மாதம் பத்து ரூபாய்.
சாமிநாதய்யர், தியாகராசச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறு சிறு கோர்வையான கட்டுரைகளால் கலைமகள் மாத இதழில் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் எந்த இடத்திலும் தொய்வு தோன்றாதபடியும் கூறியதையே திரும்பக் கூறும் தவறு இல்லாதிருத்தலும் வியப்பளிக்கிறது. சாமிநாதய்யர் தன் மனத்தில் தன் ஆசானின் வாழ்க்கை வரலாற்றை எவ்வளவு தெளிவுடனும் கோர்வையுடனும் உருவகித்துக்கொண்டிருந்தார் என்பதற்கு வித்துவான் தியாகராச செட்டியார் நூல் சிறந்த எடுத்துக்காட்டு.
இதே பண்பு பின்னர் அவர் ஆனந்த விகடனில் ‘என் சரித்திரம்’ எழுதியபோதும் வெளிப்பட்டிருக்கிறது. முதிர்ந்த வயதில் காலம் மற்றும் காட்சிகள் கலைந்து, வரிசை மாறியும் தகவல்கள் மாறியும் மனத்தில் தோன்றும் என்பார்கள். ஆனால் வித்துவான் தியாகராச செட்டியார், என் சரித்திரம் ஆகிய நூல்கள் இன்றைய கணிணிகள் உதவியுடன் இயற்றியதுபோல அவ்வளவு சீராக உள்ளன.
வித்துவான் தியாகராச செட்டியார் நூலில் சாமிநாதய்யர் செட்டியார்பால் கொண்டிருந்த பெருமதிப்பு அவர் தகவல்கள் அடுக்கிக்கொண்டு செல்லும் விதத்தில் தெரிகிறது. அவர் மிகை என்று தோன்றக் கூடியது எதையும் பயன்படுத்தியதில்லை. ஆத்திகர்கள் உயர்வு நவிற்சியைப் பயன்படுத்தும் இடத்தில்கூட சாமிநாதய்யர், மேற்கத்திய மதசார்பற்றப் பார்வை, உரைநடையில் ஏற்படுத்தியிருந்த சிறு சிறு மாற்றங்களை, உலகத்து மொழிகளில் மிகப் பழைமையானதாகிய தமிழில் அன்றே பயன்படுத்தியிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் ஆங்கிலத்தில் தன் பெயர் எழுதக்கூடிய அளவுதான் பரிச்சயம் அடைந்திருந்தார்!
சாமிநாதய்யர் எழுதிய ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்’ இரு பாகங்களில் 1933-34-இல் வெளிவந்தது. சாமிநாதய்யரின் உரைநடை, தொடக்கத்திலிருந்தே நவீனமாகவும் எளிதாகவும் இருந்தாலும், மகாவித்துவான் வரலாறு எளிதான நூல் அல்ல. சாமிநாதய்யரின் குருபக்தி விசேஷமானது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி ஆசாரங்கள் எவ்வளவு கடுமையாக அனுசரிக்கப்பட்டிருக்க வேண்டும்! ஆனால் சாமிநாதய்யர் பிள்ளையவர்களின் முடிவுவரை பக்கத்திலேயே இருந்திருக்கிறார்.
நள்ளிரவுக்கு மேல் நெடுநேரம் நினைவிழந்த ஆசிரியர் பக்கத்திலேயே கண்விழித்திருக்கிறார். ஆசிரியர் கண்விழித்து ஏதோ சொல்ல வாயெடுத்திருக்கிறார். அது திருவாசகமென்று புரிந்து கொண்டு சாமிநாதய்யர் திருவாசகத்தில் அடைக்கலப் பகுதியை வாசித்தார். சவேரிநாதப் பிள்ளை மகாவித்துவானைத் தமது மார்பில் தாங்கிக்கொண்டார். அவர் நெற்றியில் விபூதி இடப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிர் ஸ்தூல உடலிலிருந்து விடுதலை பெற்றது.
சாமிநாதய்யர், மகாவித்துவான் சரித்திரத்தில் பயன்படுத்தியிருக்கும் உரைநடைக்கும் அதற்குப் பிந்தைய படைப்புகளில் உணரப்படும் உரைநடைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முந்தையதில் ஓர் இறுக்கம் காணப்படுகிறது. பல செய்யுள்கள் எடுத்துக்காட்டப்படுவதால் வாசிப்போர் தம் மனநிலையை அடிக்கடி மாற்றிக்கொள்ளத் தேவைப்படுகிறது. வித்துவான் தியாகராச செட்டியார் நூலிலும் சில செய்யுட்பகுதிகள் நேர்ந்தாலும் பொதுவில் ஒரு சரளம் இருக்கிறது. இதை அவர் செட்டியார் அவர்களிடம் கொண்டிருந்த அந்நியோன்யம் சாத்தியமாக்கியது என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.
சாமிநாதய்யரின் இரு ஆசான்களும் மகாவித்துவான்கள் என்றாலும் தியாகராசச் செட்டியார் அன்று நாட்டில் மாறிவந்த நாகரிகத்தின் சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. ஓரிடத்தில் மாதச் சம்பளம் பெறுவதான நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசிரியர்களுக்குப் புதிய அனுபவம்.
சீடர்கள் வரும் நேரத்தில் கற்பிப்பதும் சீடர்கள் பணிவிடை செய்துவரும்போது சூசகமாக அறிவூட்டுவதும்தான் நாட்டில் காலம் காலமாக இருந்துவருவது. குறித்த நேரத்தில் தனி உடை அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்று, மணியடித்துத் தொடங்கி மணியடித்து முடிக்கும் வகுப்புகளை நடத்த ஒரு புது மனநிலை கொள்ள வேண்டியிருத்தது. தியாகராசச் செட்டியார் அவர்களுக்கு இது சாத்தியமான அளவுக்கு மகாவித்துவான் பிள்ளையவர்களால் முடிந்திருக்குமா என்பது உறுதியாகக் கூற முடியாது.
தியாகராசச் செட்டியார் காலத்தில் தமிழ் கற்பிக்கும் பாதை ஒரு புதிய திசையில் செல்ல நேர்ந்தது என்பதில் தவறில்லை. இதைப் பின்னர் சாமிநாதய்யரும் இன்னும் ஏராளமான தமிழ் அறிஞர்களும் பின்பற்றி உலக மக்களிடையே தமிழ் அறிவைப் பரப்பினார்கள்.
சீடர்களோ நண்பர்களோ எந்த அளவுக்கு ஆசிரியரின் குடும்பத்திலும் இல்லத்திலும் பங்கு பெறலாம் என்பது கேள்விக்குரியது. என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இந்த முரண்பாட்டை உணர வேண்டியிருந்தது. நான் பல மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து செல்லப்போகிறேன்; அப்போது நிறைய நண்பர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை அவர்களுக்கே கிடைத்த பெருமையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் என் மனைவிக்கோ என் குழந்தைகளுக்கோ தெரிந்தவர்கள் அல்ல. உண்மையில் அன்று என் குடும்பத்தாருக்கு நான் மிகவும் முக்கியமாகக் கூற வேண்டிய தகவல்கள் சொல்லப்படாமலேயே போய்விட்டன.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் இறுதிக் கணத்தில் அதே கூரையடியில் அவருடைய வாழ்க்கையே தன் வாழ்க்கையாகக் கொண்ட அவருடைய மனைவியாரும் மகனும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பிள்ளையவர்களின் இறுதிக் கணங்களில் அவரை நெருங்க முடியாதபடிதான் இருந்திருக்கும் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. கடைசிக் காலத்தில் சைவர்கள் நெற்றியில் விபூதி இடுவது ஆண்டாண்டுக் காலமாக இருந்து வரும் பழக்கம். ஆனால் அது பிள்ளையவர்களின் குடும்பத்தாருக்குக் கிட்டவில்லை. சாமிநாதய்யர் எழுதியதில் பிள்ளையவர்களின் அந்தரங்க உறவுகள், தனிப்பட்ட செயல்கள் இடம் பெறவில்லை. அவருடைய புலமை, கவித்துவம், மாணாக்கர்பால் அவர் கொண்டிருந்த அன்பு, இவைதான் இடம் பெறுகின்றன.
தியாகராசச் செட்டியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எழுதப்பட்ட விரிவு அவருடைய மறைவு குறித்து அல்ல. சாமிநாதய்யர் ‘சரம தசை’ என்று தலைப்பிடப்பட்ட அத்தியாயத்தில் இதை எழுதியிருக்கிறார் (இறுதிச் சடங்குகளின்போது வடமொழியே பயன்படுத்துவோர்கூட ‘சரம சுலோகம்’ என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.) பத்து வரியில் முடிவு தெரிவிக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையான செட்டியார் அவர்களின் பேச்சும் மங்கிவிட்டது. முன்பே ஏற்பாடு செய்திருந்தபடி ஒருவர் தேவாரம் படிப்பதற்காக வந்திருந்தார். ஒரு கட்டத்தில் செட்டியார் கையைத் தட்டினார். அதன் குறிப்பு சிலருக்கே விளங்கியது. வேறொரு அன்பர் சரியாகப் படிக்கத் தொடங்கினார். இறுதிக் கணத்தில்கூடச் செட்டியார் அவர்களுக்குத் தமிழ் பிழையாகப் படிக்கப்படுவதை உணர முடிந்து அதைத் தடுக்க முடிந்திருக்கிறது.
இங்கும் நாம் அக்காட்சியை முழுமையாக ஊகிக்க முடியவில்லை. ஆசான், சீடன் இருவருக்கும் தமிழ் ஒன்றுதான் அதிமுக்கியமாக இருந்திருக்கிறது. இந்த மொழிப் பற்று அவர்களை இன்னும் மேன்மையானவர்களாக்கியது என்பதில் ஐயமில்லை.
சாமிநாதய்யர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்களைத் தந்தையாகப் பாவித்தார் என்றால் தியாகராசச் செட்டியார் அவர்களை மூத்த அண்ணனாகக் கருதினார். “என் ஆசிரியரிடம் (மகாவித்துவான்) எனக்கு முன் படித்தவராதலின் இவர் எனக்கு முன்னவர்; என் பால் அன்பு வைத்துப் பழகியமையின் என் நண்பர்; இன்ன இன்னபடி மாணாக்கர்களிடம் நடந்துவர வேண்டுமென்பதையும் சில நூற்பொருள்களையும் வேறு விஷயங்களையும் எனக்கு அறிவுறுத்தியமையின் என் ஆசிரியர்களில் ஒருவர்; எனக்குத் தம் உத்தியோகத்தை அளித்துப் பிறர் கையை எதிர்பாராத நிலையைச் செய்வித்தமையின் ஒரு வள்ளல்.”
(சாமிநாதய்யர் இதை ஒரே வாக்கியமாக எழுதியிருக்கிறார். ஹென்றி ஜேம்ஸ் என்ற ஆங்கில இலக்கிய நாவலாசிரியரை ‘மாஸ்டர் ஆஃப் செமிகோலன்’ என்பார்கள். அதாவது அரைப்புள்ளி பயன்படுத்துவதில் வல்லவர். சாமிநாதய்யரின் மேற்கண்ட வாக்கியத்திலும் இத்தேர்ச்சி காணப்படுகிறது. ஓலைச்சுவடி எழுத்திலிருந்து அச்சுச் சாதனத்துக்கு எவ்வளவு இயல்பாக மாறித் தேர்ச்சியும் அடைந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.)…
குறிப்பு:
திரு. அசோகமித்திரன், தமிழின் மூத்த படைப்பாளி.
காலச்சுவடு மாத இதழில் அவர் எழுதிய ‘மாணாக்கனும் ஆசானும்’ என்ற கட்டுரையின் ஒரு பகுதி, இங்கு நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்கம் – வீரமணி வீராசாமி