இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு நவம்பர் 8, 2016 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ₹ 500 மற்றும் ₹ 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய அரசு அறிவித்தது. அதன்பின் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 (ஆர்பிஐ சட்டம்) பிரிவு 24(1)ன் கீழ், பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், அதே ஆண்டில் ₹2000 மதிப்பிலான ரூபாய் நோட்டு பிரதமர் மோடியினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் 2019 பிப்ரவரியில், அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல், பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கருப்புப் பண எதிர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் ரூ.1.3 லட்சம் கோடி கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
கருப்பு பணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவரும் நிலையில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கியானது மே மாதம் 10 ஆம் தேதி அறிவித்தது. இதனை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30 தான் கடைசி தேதி என்று அறிவித்தது. பின்னர் ஒருவாரம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாளாகும். இன்றுக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாதவர்கள் நாளை முதல் ரிசர்வ் வங்கியில் ரூ.20,000 வரை மாற்றி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.