கடந்த வாரம் வடமாநில தொழிலாளர்களை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவன் தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த மகிமை தாஸை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் உழைப்பதற்கு தயாராக இல்லை. காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதல் முதியவர் வரை டாஸ்மாக்கே கதி என்று கிடக்கின்றனர். அப்படியே வேலைக்கு வந்தாலும் நாளொன்றுக்கு 700 ரூபாய் வரை சம்பளம் கேட்டனர். இதனால், கட்டட வேலை முதல் ஹோட்டலில் டேபிள் துடைப்பது வரையிலான வேலைகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், தொழிலதிபர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை அழைத்து வந்து வேலை கொடுக்கத் தொடங்கினார்கள். தமிழகத்தில் வேலை கொட்டிக் கிடப்பதைப் பார்த்த வட மாநில இளைஞர்கள், தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் தமிழகத்திற்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போதைய சூழலில், தமிழகத்தைப் பொறுத்தவரை வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. கட்டட வேலையில் தொடங்கி நாற்று நடும் வேலை வரை வட மாநில தொழிலாளர்கள்தான் கோலோச்சி வருகின்றனர். குறைந்த சம்பளம் என்பதால் தொழிலதிபர்களும், முதலாளிகளும் வடமாநில தொழிலாளர்களையே வேலைக்கு அமர்த்துகின்றனர். குறிப்பாக, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற ஜவுளி மில்களில் வடமாநில தொழிலாளர்கள்தான் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழக இளைஞர்கள் வன்மத்தை கொட்டி வருகின்றனர். தவிர, அவ்வப்போது வடமாநில தொழிலாளர்களை தமிழக இளைஞர்கள் தாக்குவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், ஓடும் ரயிலில் வடமாநில தொழிலாளர்களை தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொடூரமாகத் தாக்கிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? எந்த ரயிலில் எடுக்கப்பட்டது என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. எனினும், இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸார், மேற்கண்ட நபர் மீது ஆபாசமாக பேசுதல், சிறுகாயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதேசமயம், வடமாநில இளைஞர்களை தாக்கிய அந்த நபர் யார் என்பது தெரியாததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரது புகைப்படத்தை தமிழக ரயில்வே காவல்துறையின் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.
மேலும், அந்த நபர் பற்றிய விவரங்கள் தெரிந்தால், துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை அறிவித்திருந்தது. இந்த சூழலில்தான், வட மாநில தொழிலாளர்களை தாக்கிய அந்த நபர், விழுப்புரம் மாவட்டம் கானை கிராமத்தைச் சேர்ந்த மகிமை தாஸ் என்பதும், அவன் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருபவன் என்பதும், அவன் மீது சில காவல் நிலையங்களில் சிறு சிறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், மேற்கண்ட சம்பவம் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்ததும், விழுப்புரத்தை அடுத்த விருத்தாசலம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, வடமாநில இளைஞர்களை மகிமைதாஸ் தாக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து, பொதுமக்களில் ஒருவர் மகிமைதாஸ் பற்றி துப்புக் கொடுத்ததைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் பதுங்கி இருந்த மகிமை தாஸை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். மேலும், துப்புக் கொடுத்த நபருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.