திருச்சியில் நடைபெறும் தி.மு.க. பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு 6,000 கிலோ மட்டன் பிரியாணி, 4,000 கிலோ சிக்கன் 65, 30,000 முட்டை தயாரித்து தடபுடலாக விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க. 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பார்லிமென்ட் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு இப்பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்காக திருச்சி ராம்ஜிநகர் பரமேஸ்வரி மில் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு மேடை மற்றும் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், 12,000 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், அவர்களுடன் வரும் தொண்டர்களுக்கும் சேர்த்து 15,000 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்காக 5,000 கிலோ அரிசி, 6,000 கிலோ மட்டன், 4,000 கிலோ சிக்கன் 65 வறுவல், 30,000 என தடபுடலாக விருந்து வழங்கப்பட்டு வருகிறது.