திருச்சியில் டாஸ்மாக் கடையில் போலி டின் பீர் விற்பனை செய்தது அம்பலமாகி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. காரணம், டாஸ்மாக் துறை அமைச்சரான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் கரூர் கம்பெனி என்கிற பெயரில் டாஸ்மாக் கடைகளில் 30,000 ரூபாய் முதல் 2 லட்சும் ரூபாய் வரை மாதம்தோறும் மாமூல் வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், செந்தில்பாலாஜி தரப்பினர் பணம் கேட்பது தொடர்பான வீடியோக்களும், செந்தில்பாலாஜி தரப்பினரும் பணம் கேட்பதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, சேலத்திலும் டாஸ்மாக் பாரில் மது வாங்கிக் குடித்த ஒருவர் உயிரிழந்தார். இதற்கு காரணமாக, டாஸ்மாக் பாரில் போலி மது விற்பதாகக் கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலி மதுபான தொழிற்சாலைகளை போலீஸார் கண்டுபிடித்து சீல் வைத்திருக்கிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டாஸ்மாக் பாரிலேயே போலி டின் பீர் விற்பனை செய்தது அம்பலமாகி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் முசிறியில் டாஸ்மாக் கடை எண் 10360 என்கிற கடையில், மதுப் பிரியர்கள் சிலர் பீர் வாங்கச் சென்றிருக்கிறார்கள். அப்போது, டின் பீர் மட்டுமே இருப்பதாகக் கூறி, கொடுத்திருக்கிறார்கள். அந்த டின் பீரின் வெளிப்புறம் ஒரு லேபிளும், உள்புறம் மற்றொரு லேபிளும் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த மதுப்பிரியர், வெளிப்புறம் இருந்த ஸ்டிக்கரை பார்த்திருக்கிறார். அதில், சேல்ஸ் ஒன்லி தமிழ்நாடு என்று இருந்திருக்கிறது. அந்த லேபிளை கிழித்துவிட்டு உள்ளே பார்த்தபோது, சேல்ஸ் ஒன்லி டெல்லி என்று இருந்திருக்கிறது.
இதனால், ஷாக்கான மதுப்பிரியர் இதுகுறித்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த விற்பனையாளரோ, டாஸ்மாக் குடோனில் இருந்து வரும் சரக்குகளைத்தான் நாங்கள் விற்கிறோம். ஆகவே, நீங்கள் டாஸ்மாக் மேலாளரிடம் கேளுங்கள் என்று கூறி, அவரது நம்பரையும் கொடுக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது என்பதோடு, போலி மதுபானமும் கலப்படம் செய்யப்படுகிறது என்பது அம்பலமாகி இருக்கிறது.