வீல் சேரில் தாயின் சடலம்… திருச்சியில் நிகழ்ந்த சோகம்!

வீல் சேரில் தாயின் சடலம்… திருச்சியில் நிகழ்ந்த சோகம்!

Share it if you like it

திருச்சியை சேர்ந்த முருகானந்தம் தனது தாயாரின் சடலத்தை யாரின் துணையும் இல்லாமல் சுடுகாட்டிற்கு எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் முருகானந்தம். இவரது, தாயார் ராஜேஸ்வரி 74., பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்த நிலையில் வீட்டில் சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த, நான்காண்டுகளாக தனது தாயை முருகானந்தம் நன்கு கவனித்து வந்துள்ளார். நீண்ட நாட்கள், ராஜேஸ்வரி படுக்கையில் இருந்த காரணத்தினால், அவருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அது அலர்ஜியாக மாறி ஒரு கட்டத்தில் பெரும் ரணமாக மாறியுள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை ராஜேஸ்வரி திடீரென இறந்து விட்டார்.

ராஜேஸ்வரியின் மூன்றாவது மகன் மட்டுமே தனது தாயை கவனித்து இருக்கிறார். மற்ற இரு மகன்களுகம் தோல் நோய் பாதிக்கப்பட்ட தாயை கவனிக்காமல் ஒதுங்கி இருக்கின்றனர். மேலும், உறவினர்கள் கூட அந்த வீட்டின் பக்கமே செல்லவில்லை. முருகானந்தத்தின் மனைவியும் தனது கணவரிடம் கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இப்படிப்பட்ட சூழலில், தாயாரின் மரணம் முருகானந்தத்திற்கு பெரும் இடியாக இறங்கி இருக்கிறது. இதையடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் திணறி இருக்கிறார். சில, நிமிட யோசனைக்கு பிறகு தாயின் உடலை வீல் சேரில் வைத்து துணியால் மூடி இருக்கிறார். இதையடுத்து, வீட்டில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள இடுகாடு வரை வீல் சேரை தள்ளி சென்று இருக்கிறார்.

அங்கிருந்த, மயான ஊழியர்களிடம் தாயாரின் இறப்பு குறித்து விளக்கமாக கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து, ஊழியர்கள் மயான பராமரிப்பாளர் ஸ்ரீதருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். தகவல் அடிப்படையில் அங்கு வந்த ஸ்ரீதர், அரசு தரப்பில் கிடைக்கும் உதவிகள் குறித்து, அவருக்கு சுட்டிக்காட்டியதோடு தனது கோவத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அதன்பின், இறுதிச் சடங்குகளை செய்து உடலை எரியூட்டியுள்ளனர்.

‘எங்க அம்மா உயிரோட இருந்தப்ப எவனும் வரலை. அவங்க செத்த பின்னாடி எவன் வந்து என்ன செய்யப் போறான்… அதான், நானே என் அம்மாவை வீல் சேரிலேயே தள்ளி கொண்டு வந்தேன் என உருக்கமுடன் அவர் தெரிவித்து இருக்கிறார்.


Share it if you like it