டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப டாக்டருடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாட அனுமதிக்கும்படி டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று( ஏப்.,18) விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூஹைப் ஹூசைன் கூறியதாவது: கெஜ்ரிவால், உடல்நிலையை பற்றி கவலைப்படாமல், இனிப்புகள் மற்றும் மாம்பழங்களை எடுத்துக் கொள்கிறார். கெஜ்ரிவாலின் உணவுப்பட்டியலை நீதிமன்றம் முன்பு சமர்ப்பித்து உள்ளோம். வழக்கமான நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் உணவை கெஜ்ரிவால் எடுத்துக் கொள்வது இல்லை. அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வேண்டுமென்றே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற முயற்சி செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பிறகு, நீதிமன்ற வளாகத்தில் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர்கள் கூறியதாவது: டாக்டர்கள் பரிந்துரை செய்த உணவைத் தான் கெஜ்ரிவால் சாப்பிடுகிறார். நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டில் இருந்து தயாரித்து கெஜ்ரிவாலுக்கு உணவு வழங்கப்படுவதை தடுக்க அமலாக்கத்துறை சதி செய்கிறது. இது அவரின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.