சமீபத்தில் மேற்கு வங்கத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மினாகான் பகுதியில், சதேஷ்காலி கிராமத்தில் வசிக்கும் பெண்களிடம் பாலியல் வன்முறை மற்றும் நில அபகரிப்பில் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை காவல்துறை கைது செய்தனர்.
பாசிர்ஹாட் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் சந்தேஷ்காலி, கடந்த மூன்று மாதங்களாக ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல பெண்கள் போராட்டங்களை நடத்தி இந்த சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தனர்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய திருமதி.ரேகா பத்ரா என்பவரை பாசிர்ஹத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் திரிணாமுல் காங்கிரஸின் ஹாஜி நூருல் இஸ்லாமை எதிர்த்துப் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
சந்தேஷ்காலியில் உள்ள பத்ரா பாரா பகுதியில் வசிப்பவர் ரேகா பத்ரா. ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் போது அவர் குரல் கொடுத்துள்ளார். ஷேக் ஷாஜகானின் இரண்டு உதவியாளர்களான ஷிபு ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தார் ஆகியோருக்கு எதிராக அவர் எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்தார்.
அவரது புகாரைத் தொடர்ந்து, ஷிபு ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தார் மீது சந்தேஷ்காலி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, பிப்ரவரி மாதம் இருவரையும் மேற்கு வங்க காவல்துறை கைது செய்தது.
ரேகா பத்ரா, ஷேக் ஷாஜகானின் உதவியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் முன் தனது வாக்குமூலத்தைப் பதிவுசெய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க செய்தார்.
சந்தேஷ்காலியில் போராட்டம் வெடித்த முதல் நாளிலிருந்தே பெண்களின் போராட்டத்தின் முகமாக ரேகா பத்ரா இருந்து வருகிறார். உள்ளூர் காவல்துறை மற்றும் மேற்கு வங்க அரசுக்கு எதிராக குரல் எழுப்ப அவள் அஞ்சவில்லை.
42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும்.