ஆசிரம நிர்வாகி மனைவி உள்பட 9 பேர் கைது: உடல் உறுப்புகளை திருட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடத்தல்?!

ஆசிரம நிர்வாகி மனைவி உள்பட 9 பேர் கைது: உடல் உறுப்புகளை திருட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடத்தல்?!

Share it if you like it

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனியார் ஆசிரமத்தில் மாயமான 16 பேர், உடல் உறுப்புகள் திருடுவதற்காக கடத்தப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தனியார் ஆசிரம நிர்வாகி மற்றும் அவரது மனைவி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமம் இயங்கி வருகிறது. இதை கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி (45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என்று சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரமத்தில் திருப்பூரை சேர்ந்த ஹனிதீன் என்பவரால் சேர்க்கப்பட்ட  ஜாபருல்லா(45) என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயமானார். இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையின்போது, ஆசிரமம் குறித்த சர்ச்சை பூதாகரமாக எழுந்துள்ளது.

போலீஸ் விசாரணையில், ஜாபருல்லா விழுப்புரத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட் உத்தரவு படி, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் கடந்த 10ம் தேதி, ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பணியாளர்கள் 27 பேர் உள்பட சுமார் 150 பேர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை மற்றும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு மற்றும் கெடார், ஆசிரமத்தில் தங்கியிருந்த கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரும் தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் கேரளாவை சேர்ந்த விஜி மோகன்(46), பணியாளர்கள் அய்யப்பன்,  கோபிநாத் (24), முத்துமாரி (35) ஆகியோர் மீது 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில், மேலாளர் விஜி மோகன், ஊழியர்கள் அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி குரங்கு கடித்ததால் காயம் அடைந்ததாக கூறி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அதேபோல் அவரது மனைவி மரியாஜூபின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதனால் இவர்கள் இருவரையும் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், உடல்நலம் சரியானதை அடுத்து, மரியாஜூபின் நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, மரியாஜூபினை கைது செய்து, விசாரணைக்காக கெடார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதேபோன்று, ஆசிரமத்தில் பணியாளராக பணியாற்றி வந்த பூபாலன்(34), சதீஷ்(35), தாஸ்(75) ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, நேற்று அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஜூபின்பேபி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு, போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது மருத்துவமனை வார்டில் இருந்து வெளியே வந்த ஜூபின்பேபி அங்கிருந்த போலீசாரிடம், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள், என் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி கடும் வாக்குவாதம் செய்தார். இதன்பின்னர் அவரும் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜூபின்பேபி தொடர்ந்து மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வருகிறார். இவரிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே ஆசிரமத்தில் இருந்து மாயமானதாக கூறப்படும் ஜாபருல்லா(45)  நிலை குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

*

ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர், முதியோர்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்பட 109 ஆண்கள், 33 பெண்கள் என்று மொத்தம் 142 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரச்னைக்குரிய ஆசிரமத்தை சீல் வைக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார்.

ஆசிரமத்தில் இன்னும் சிலர் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஆசிரமத்துக்கு சீல் வைக்க வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குண்டலப்புலியூர் ஆசிரமத்துடன் தொடர்பில் பெங்களூருவில் இயங்கி வரும் மற்றொரு ஆசிரமத்தில் இருந்து தான் 16 பேர் மாயமாகி இருக்கிறார்கள். ஆனால், பெங்களூரு ஆசிரமம் தரப்பில் இந்த தகவலை மறுத்து வருகிறார்கள். இதனால், மாயமான 16 பேர் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை. அவர்கள் உடல் உறுப்புகளை திருடுவதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன்பேரில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.


Share it if you like it