உத்திரபிரதேச மாநிலத்தின் கடந்த காலங்களில் வலிமையான ஆளும் கட்சியாகவும் பிரதானமான எதிர்கட்சியாகவும் உத்தர பிரதேச அரசியலிலும் தேசிய அரசியலிலும் ஒரு ஆளுமையாகவும் இருப்பது சமாஜ்வாடி கட்சி. பிராந்திய கட்சியான இதில் அதன் தலைவர் முலாயம் சிங் யாதவ் பல காலம் மாநிலத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்தவர். எதிர்க்கட்சி பதவிலும் இருந்தவர். அந்த வகையில் அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். தற்போது இவரது கட்சியில் அவரது மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் கட்சி பயணிக்கிறது. தமிழகத்தில் இருக்கும் திமுகவை போல தேசிய அளவில் காங்கிரசை போல சமாஜ்வாடி கட்சியும் முலாயம் சிங் யாதவ் குடும்ப அரசியலாக வாரிசு அரசியலாகவே தொடர்ந்த போதிலும் உத்தரப்பிரதேசத்தில் வலுவான செல்வாக்குள்ள கட்சியாக தொடர்கிறது.
காங்கிரஸ் கம்யூனிஸ்ட் வரிசையில் அப்பட்டமான வாக்கு வாங்கி செய்யக்கூடிய சிறுபான்மை பாச கட்சி தான் சமாஜ்பாடி கட்சியும் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் தனிப்பட்ட வாழ்வில் யாதவர்களாக பாரதத்தின் சனாதன தர்மத்தின் வழியில் அந்த வாழ்வியலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாரம்பரியமான இந்துக்கள் தான் அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் குடும்பத்தினர். தங்களின் வீடு குடும்பம் வாழ்க்கை என்று வரும்போது பண்டிகைகள் கொண்டாட்டங்கள் விழாக்கள் உற்சவங்கள் அத்தனையும் பாரம்பரிய அடிப்படையில் முன்னெடுப்பவர்கள். அதே நேரத்தில் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக மாநிலத்திலும் தேசிய அளவிலும் வாக்கு வங்கி அரசியல் செய்து பெரும்பான்மை இந்துக்களை வஞ்சிப்பதிலும் குறை வைத்தவர்கள் இல்லை. ஒரு புறம் வீட்டில் விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலை வைத்து வழிபாடு செய்து உற்சாகமாக விழாவை கொண்டாடுவார்கள். அவர்களின் வீதி வழியாக விஎச்பி உள்ளிட்டவர்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதை மத பயங்கரவாதம் காவி பயங்கரவாதம் என்று அரசியலும் செய்வார்கள்.. ராமஜன்ம பூமி விவகாரத்தில் கடும் அடக்கு முறைகளையும் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்தவர்கள் . ஆனால் அதே ராமர் ஆலயம் அமையும் போது அதில் இவர்களின் பங்களிப்பும் கைங்கரியமும் கூட நிச்சயம் இருக்கும். குடும்பத்தோடு விஐபி தரிசனம் செய்து மகிழும் முதல் அரசியல் குடும்பம் உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவியின் குடும்பமாக தான் இருக்கும் . அந்த வகையில் அரசியலுக்கு சித்தாந்தம் கொள்கை வேறு . தனிப்பட்ட வாழ்வில் தங்களின் வாழ்வியல் வேறு என்று தெளிவாக பயணிப்பவர்கள்.
இந்த அரசியல் புரிதலும் வாக்கு வங்கி அரசியல் சாதுரியமும் கை கொடுத்ததால் தான் பல ஆண்டுகாலம் உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு மதம் இனம் மொழி கொண்ட மக்களின் ஆதரவோடு ஆட்சியை தொடர முடிந்தது. வலுவான அரசியல் களத்தில் நிற்கவும் முடிந்தது. பெரும்பான்மை விரோதமாக சிறுபான்மை ஆதரவு அரசியல் செய்த போதிலும் இந்துக்களின் நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் பண்டிகைகள் உற்சவங்களை இழிவு படுத்தியோ அவமதித்தோ சமாஜ்வாடி கட்சிகள் பேசியதோ? பேசியவர்களை ஆதரித்ததாகவோ வரலாறு கிடையாது. வட இந்தியர்களுக்கு இயல்பான இந்துத்துவ பற்றுதலும் ஆன்மீக நம்பிக்கைகளும் சற்றும் குறையாத வழியில் தான் யாதவ குடும்பங்கள் இன்றளவும் தொடர்கிறது.
ஆனால் கடந்த காலங்களில் வராத இந்து மக்களின் எதிர்ப்பும் கண்டனமும் ஐஎன்டிஐஏ கூட்டணியை எதிர் நோக்கி வருவதால் எதிர்வரும் தேர்தலில் தங்களின் நிலை என்னவாகும் ? என்று அச்சப்படும் ஒரு சூழலை தற்போது சமாஜ்வாடி கட்சி எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறது. அதற்கு காரணம் சமாஜ்வாடி கட்சி சார்ந்திருக்கும் காங்கிரஸ் தலைமையிலான தேசிய அளவிலான ஐஎன்டிஐஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகத்தின் திமுக என்னும் பிராந்திய கட்சியும் அந்த கட்சியின் இளவரசர்களின் தொடர்ச்சியான இந்து விரோத செயல்பாடுகளுமே.
அரை நூற்றாண்டு காலமாக இந்து விரோதம் பெரும்பான்மை மத துவேஷம் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் இறை மறுப்பு பகுத்தறிவு என்ற பெயரில் இந்து தர்மத்திற்கும் அதன் வழிபாட்டு முறைகள் ஆலயங்கள் பண்டிகைகள் உற்சவங்கள் மட்டுமே எதிர்த்து அப்பட்டமான இந்து துவேஷத்தை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வந்த கட்சி திமுக . மாநில அரசியல் தேசிய அரசியல் இரண்டிலும் வலுவாக காலூன்றிய போதிலும் திமுகவின் இந்த இந்து விரோதமும் இந்திய விரோதமும் பெரிய அளவில் தமிழகத்தின் எல்லையை தாண்டியதில்லை. இந்த விவகாரத்தை நாடு முழுவதும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் ஒரு வகையில் திமுகவினரின் இந்த பிரிவினை இந்திய எதிர்ப்பு இந்து விரோத சித்தாந்தங்களை மறைமுகமாக ஆதரித்ததால் அவர்கள் திமுகவின் இந்து விரோதம் தமிழகத்தின் எல்லையை கடக்காமல் பார்த்துக் கொண்டார்கள்.
ஊடகங்கள் சமூக ஊடகங்கள் இல்லாத காலம் . மொழி என்னும் தகவல் தொடர்பு குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் வட மாநிலங்களில் என்ன நடக்கிறது ? என்ற முழு உண்மை நிலை தமிழகத்திற்கு தெரியாது. தமிழகத்தில் என்ன நடக்கிறது ? என்ற முழுமையான எதார்த்த நிலை வட இந்தியாவில் எதிரொலிக்காது என்ற அளவில் திமுக சரியாக பயன்படுத்தி தனது இந்து இந்திய விரோத அரசியலை முன்னெடுத்தது. ஆனால் தற்காலத்தில் சமூக ஊடகங்கள் வாயிலாக ஊடகங்களை விடவும் வேகமாக உலகில் எந்த ஒரு மூலைக்கும் செய்திகள் பரவும் காலகட்டத்தில் திமுகவின் ஒவ்வொரு இந்து விரோத நடவடிக்கைகளும் இந்திய விரோத அரசியலும் அடுத்த கணம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. தற்போது இதுவே திமுகவிற்கும் ஐஎன்டிஐஏ கூட்டணிக்கும் பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது.
கடந்த மாதம். தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியில் தாய் அமைப்பான திராவிட கழகத்தின் ஆதரவு அமைப்பான தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற ஒன்று சென்னையில் நடந்தேறியது . உள் அரங்க நிகழ்வாக தமிழக அரசின் அனுமதியோடும் தமிழக மாநில காவல்துறையின் முழு பாதுகாப்போடும் நடந்த இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சரும் திமுகவின் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தவருமான சேகர் பாபு பங்கேற்றார். தமிழகத்தில் முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஸ்டாலினின் மகன் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் மாநிலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் என்று பன்முக பொறுப்பில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் மற்றொரு சிறப்பு அழைப்பாளராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் . சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள் சனாதன ஒழிப்பு என்ற இந்த தலைப்பிற்கு பெரும் ஆதரவு தெரிவித்தார்கள். அதோடு சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. ஒழிக்கப்பட வேண்டியது. அந்த வகையில் உங்களோடு உடன்படுகிறேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி என்று அப்பட்டமான மத துவேஷ கருத்துக்களை உதயநிதி பேசினார். மேடையில் இருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சை கைதட்டி ஆரவாரம் செய்தது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உதயநிதிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்த நிலையில் இந்நிகழ்விற்கு சட்டப்படியான நடவடிக்கை தேவை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய உதயநிதி இந்த காவிகளின் மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன். நான் கலைஞரின் பேரன். பெரியார் அண்ணா வழியில் வாழ்பவன் . திமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டதே இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் சனாதனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான். அதனால் ஆட்சியே போனாலும் கவலை இல்லை. எங்களுக்கு சனாதன ஒழிப்பு தான் முக்கிய இலக்கு என்று தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்தார். இதற்கு திமுகவின் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள் பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்தார்கள். மாநிலத்தின் முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஸ்டாலின் தனது மகனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரின் மீதான கண்டனங்கள் வழக்கு பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பொதுவெளியில் பகிரங்கமாக கருத்து பதிவு செய்தார்.
இவையாவும் நாடு முழுவதும் திமுகவின் இந்து விரோதத்தை அப்பட்டமாக கொண்டு போய் சேர்த்தது. தமிழகத்தில் இருக்கும் பாஜக இந்து அமைப்புகள் வீதியில் இறங்கி போராடியது. நாடு முழுவதும் இருக்கும் இந்து அமைப்புகள் சாமியார்கள் உதயநிதிக்கும் திமுக விற்கும் கண்டனங்களை தெரிவித்தார்கள் .ஒரு சிலர் வழக்கும் பதிவு செய்தார்கள் .ஆனால் இது எதற்கும் அஞ்சாத திமுகவினர் தொடர்ச்சியாக அவர்களின் இந்து விரோத நிலைப்பாட்டில் மேலும் மேலும் வன்மமான கருத்துக்களை பதிவு செய்து வந்தார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு அது ஐஎன்டிஐஏ கூட்டணியில் எதிரொலிக்க தொடங்கியது.
காங்கிரஸ் பொதுவாக உதயநிதியின் பேச்சு குறித்த கேள்விக்கு ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த அடையாளம் கருத்தியல் இருக்கும். அதில் நாங்கள் தலையிட மாட்டோம். அதே நேரத்தில் உதயநிதியின் கருத்து அவர்களின் சொந்த கருத்து ஐ என் டி ஐ ஏ கூட்டணிக்கும் அவர்களின் கருத்திற்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் கொண்டது. ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் திமுகவின் தலைமை குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் நேரடியாகவே தொலைபேசி மூலமாக தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்ததோடு உதயநிதியின் இந்த பேச்சு ஐஎன்டிஐஏ கூட்டணியில் எவ்வளவு குழப்பங்களை இடையூறுகளை ஏற்படுத்த கூடும் ? என்ற தனது அச்சத்தையும் பதிவு செய்திருந்தார். உதயநிதியின் இந்த பேச்சை கண்டிக்க வேண்டிய முதல்வர் இதை ஆதரித்து பேசியதில் தனக்கு இருந்த அதிருப்தியையும் வெளிப்படுத்தி இருந்தார்.
ஐஎன்டிஐஏ கூட்டணியில் காங்கிரஸின் கூட்டணி கட்சியாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வலுவான கட்சியாக இருக்கும் சிவசேனா பகிரங்கமாக உதயநிதிக்கும் திமுக விற்கும் எதிர்ப்பை தெரிவித்தது. இது ஐஎன்டிஐஏ கூட்டணியின் வெற்றி வாய்ப்பை வட இந்திய அளவில் பெருமளவில் பாதிக்கும் என்று கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் உதயநிதியின் இந்த பேச்சு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதால் எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் பெரும் பின்னடைவை கொடுக்கும் என்று அச்சம் தெரிவித்தார்கள்.
திமுகவின் நெருங்கிய தோழமைக் கட்சியாக ஸ்டாலினின் அரசியல் நண்பியாக வலம் வரும் மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் ஐ என் டி ஐ ஏ கட்சியின் முக்கிய அங்கமுமான மம்தா பானர்ஜி இன்னும் ஒரு படி மேலே போய் தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் உதயநிதியின் பேச்சுக்கு பதிவு செய்ததோடு எந்த ஒரு மதத்தையும் வழிபாட்டு முறைகளையும் புண்படுத்தும் செயல் அரசியல் பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாகரீகம் அல்ல. அதிலும் உதயநிதி போன்ற சிறு பிள்ளைகள் இப்படிப்பட்ட விஷயங்களில் பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று பொதுவெளியில் திமுகவின் பொறுப்பற்ற தனத்தையும் உதயநிதியின் சிறுபிள்ளைத்தனமான செய்கையும் போட்டு உடைத்தார் .இது ஐஎன்டிஐஏ கூட்டணியில் பெரும் அவமதிப்பையும் பின்னடைவையும் திமுகவிற்கு ஏற்படுத்தியது.
இவ்வளவு நடந்த பிறகும் திமுகவின் சனாதன விரோத பேச்சுக்களும் அல்லது அவர்களின் கடந்த கால நிகழ்வுகளுக்கோ அவர்கள் எந்த வித விளக்கங்கள் பொறுப்புக்களை ஏற்க தயாராக இல்லை. ஆனால் தன் மீதான கண்டனங்கள் வழக்குகள் போராட்டங்களை ஜனநாயகத்திற்கு எதிரானது. கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தானது என்று மேலும் மலிவான அரசியலை திமுக செய்தது. இன்னும் ஒரு படி மேலே போய் பாஜகவின் நிர்வாகி அமித் மாளவியா உதயநிதியின் கருத்தை திரித்து பதிவிட்டதாக அபாண்டமாக பழி சுமத்தி பொய் வழக்கும் பதிவு செய்தது. அனைத்தையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் பேசும்போது சனாதனிகள் சனாதன விரோதிகளிடமிருந்து மிகவும் கவனமாக இருங்கள். அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக அதன் வழியில் வாழும் சனாதனிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த தொடங்கி விட்டார்கள் . அவர்கள் வன்மம் பிடித்தவர்கள் . சனாதனிகள் அவர்களிடமிருந்து விழிப்போடும் பாதுகாப்போடும் இருங்கள் என்று எச்சரிக்கை செய்திருந்தார். இதன் மூலம் தேசிய அளவில் திமுகவும் அது சார்ந்திருந்த ஐஎன்டிஐஏ கூட்டணியும் சமாதான எதிர்ப்பாளர்கள் என்ற ரீதியில் மக்கள் பெரும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் தேடிக் கொண்டது.
எது நடக்கக்கூடாது? என்று ஐ என் டி ஐ ஏ கூட்டணியின் இருந்தவர்கள் உதயநிதியின் பேச்சை அவசர அவசரமாக கண்டித்தார்களோ? இறுதியில் அது நடந்தே விட்டது. திமுகவின் இந்து விரோத அரசியலும் உதயநிதியின் சனாதன அழிப்பு மாநாடு பேச்சும் நாடு முழுவதும் போய் சேர்ந்து காஷ்மீரின் கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை உதயநிதிக்கு எதிராக களமிறங்கியது. பல்வேறு கூட்டணி கட்சிகள் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த போதிலும் இன்னமும் ஐஎன்டிஐஏ கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பது அவர்களுக்கு பெருத்த பின்னடைவை தேடி கொடுத்திருக்கிறது.
கிருஷ்ணர் ஜெயந்தி விநாயகர் சதுர்த்தி அடுத்து வர இருக்கும் நவராத்திரி என்று வரிசையாக வட இந்திய மாநிலங்களில் விழாக்கோலம் களைகட்டும். ஆலயங்கள் பண்டிகைகள் உற்சவங்கள் என்று வட இந்திய மக்கள் தங்களின் பாரம்பரிய சனாதன தர்மத்தின் வழியில் கொண்டாட்டங்களை முன்னெடுப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் எதிரில் போய் எதிர்வரும் தேர்தலுக்கு ஐஎன்டிஐஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவும் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யவோ இயலாத நிலை ஐஎன்டிஐஏ கூட்டணி சார்ந்த ஒவ்வொரு கட்சிக்கும் தலைவர்களுக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த முழு நெருக்கடிக்கு காரணம் திமுகவில் இந்து விரோதமும் சனாதன ஒழிப்பு மாநாடு பின்னணியும் மட்டுமே.
ஊடகங்கள் பொது இடங்கள் அரசியல் மேடைகள் என்று எங்கு திரும்பினாலும் ஐஎன்டிஐஏ கூட்டணியில் அங்கும் வகிக்கும் ஒவ்வொருவரும் எதிர் கொள்ள வேண்டியது சனாதன ஒழிப்பு தான் திமுகவின் இலக்கு என்று அதன் இளவரசர் உதயநிதி வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அவரோடு நீங்கள் கூட்டணியில் இருக்கிறீர்கள். உங்களின் நிலைப்பாடும் அதுதானா ? என்ற கேள்வியை எதிர்கொள்ளவும் முடியாமல் தப்பிச் சொல்லவும் முடியாமல் ஐ என் டி ஐ ஏ கூட்டணியை சார்ந்த ஒவ்வொரு தலைவரும் முடங்கி இருக்கிறார்கள். இதன் எதிரொலியாக மூன்றாவது ஒருங்கிணைப்பு மாநாடாக ஐ என் டிஐ ஏ கூட்டணி சார்பில் மத்திய பிரதேசம் போபாலில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டையும் ரத்து செய்து விட்டார்கள்.
ஆனால் தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலம் அத்துமீறல் அராஜகம் வன்முறை அவதூறு பிரச்சாரம் பொய் புரட்டு அரசியல் என்று எதிர்மறை பிம்பங்களிலேயே பிறந்து வளர்ந்த திமுகவிற்கு வட இந்திய அரசியலிலும் மக்களிடையே இருக்கும் ஆழ்ந்த இந்துத்துவ ஈடுபாடும் அதன் அடிப்படையில் எதிரொலிக்கும் அரசியல் நிலவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அடிப்படை உண்மைகள் புரிந்து இருந்தால் திமுக நிச்சயம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக சுதாரிப்புடனே இருந்திருக்கும். தமிழகத்திலேயே ஆட்சியில் இருக்கும்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் வெளிப்படையாக இந்து துவேஷம் பேசுபவர்கள். தேர்தல் நெருங்கி விட்டால் நாங்களும் இந்துக்கள் தான். எங்களது கட்சியில் இருக்கும் 90% தொண்டர்கள் இந்து மதம் சார்ந்தவர்கள் தான். திமுகவும் ஆன்மீக கட்சி .தான். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சியாக கட்டமைக்க பாஜக உள்ளிட்ட மத பயங்கரவாத கட்சிகள் தான் சதி செய்கிறது என்று வெளிப்படையாக பேசி இந்துக்களின் வாக்குகளுக்காக காத்திருப்பவர்கள் தான் திமுகவினர். ஆனால் அவர்கள் கள நிலவரம் தெரியாமல் தமிழகத்திற்கு வெளியே இருக்கும் உண்மை நிலவரமும் புரியாமல் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற ரீதியில் செய்யப்போன விவகாரம் இன்று அவர்களுக்கும் தேசிய அரசியலில் சிக்கலாகி அவர்கள் சார்ந்த கூட்டணிக்கும் சிக்கலாக மாறி இருக்கிறது.
உச்சநீதிமன்றம் உதயநிதிக்கும் அவர் சார்ந்த மாநில அரசுக்கும் இந்த சனாதன ஒழிப்பு மாநாடு பற்றி கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதை திமுகவினர் அவர்களின் வழக்கத்தின் படி எதிர்கொள்வார்கள். என்றாலும் இதன் முழு எதிரொலியும் அவர்கள் சார்ந்திருக்கும் ஐயன்டிஐஏ கூட்டணி அவர்கள் சார்ந்த கட்சிகள் தலைவர்களை ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஒட்டுமொத்தமாக கூட்டணியையும் தமிழகத்திற்கு வெளியே இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் நிச்சயமாக கடுமையாக பாதிக்கும்.
அதன் முதல் வெளிப்பாடு தான் உத்திர பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது கூட முழு பாதுகாப்போடும் மரியாதையோடும் வலம் வந்த சமாஜ்வாதி கட்சியினர் இன்று வெளியில் தலை காட்ட முடியவில்லை என்று புலம்பும் நிலை வந்திருப்பது . உத்தர பிரதேசத்தில் தனி ஆளுமையாக செல்வாக்குடன் இருக்கும் அகிலேஷ் யாதவ் எங்கோ இருக்கும் தமிழகத்தில் உதயநிதி பேசிய பேச்சால் தனது சொந்த மாநிலத்தில் சொந்தத் தொகுதியில் கூட என்னால் நடமாட முடியவில்லை என்று வேதனையோடு பொதுவெளியில் கருத்து பதிவு செய்திருக்கிறார். அந்த அளவிற்கு உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு திமுகவின் இந்து விரோத அரசியலும் நாடு முழுவதும் சாமானிய மக்கள் வரை போய் சேர்ந்திருக்கிறது. அதற்கு வட இந்திய மக்கள் அவர்களது பாணியில் எதிரொலிக்க தொடங்கி விட்டார்கள்.
இனி ஐஎன்டிஐஏ கூட்டணிக்கு இருப்பது இரண்டு வாய்ப்புகள் தான். ஒன்று திமுகவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து தங்களின் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக் கொள்ளும் விதமாக பிரதமர் குறிப்பிட்டது போல் தாங்களும் தங்கள் சார்ந்த கூட்டணியும் சனாதனத்திற்கு எதிரானவர்கள் தான் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு கூட்டணி தர்மத்தை காத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிவை அவர்கள் எடுக்கும் பட்சத்தில் அது வாழ்வா? சாவா ? என்ற நிலையில் இருக்கும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒட்டுமொத்த கூட்டணி கட்சிகளின் அரசியல் எதிர்காலத்திற்கும் முடிவுரையை எழுதிவிடும் . இனி எந்த காலத்திலும் அவர்கள் அரசியலில் முகம் காட்ட வண்ணம் அவர்களை முடக்கிவிடும். காரணம் வட இந்தியர்களிடம் இருக்கும் ஆன்மீக ஈடுபாடும் சனாதன பற்றுதலும் அவ்வளவு ஆழமானது. அதை அவர்கள் நன்றாக உணர்ந்ததால் தான் வாக்கு வங்கி அரசியலை கத்தி மேல் நடக்கும் வித்தையாக கவனமாக கையாண்டு வருகிறார்கள்.
கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க முடியாத பட்சத்தில் ஐஎன்டிஐஏ கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேறச் செய்து அதன் மூலம் திமுகவின் இந்து விரோத அரசியலுக்கும் உதயநிதியின் சனாதன ஒழிப்பு மாநாடு பேச்சிருக்கும் ஐஎன்டிஐஏ கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் அவர்களது இந்து விரோத அரசியலை ஆதரிக்கவும் அதனோடு உடன்படவோ இல்லை. என்று தேசிய அரசியலில் இருந்து திமுகவை தனிமைப்படுத்துவது. அதன் மூலம் தாங்கள் சனாதனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவர்கள் தான் என்ற அடையாளத்தோடு தங்களின் வழக்கமான அரசியலில் களம் காண்பது .இந்த இரண்டில் ஏதேனும் ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஐஎன்டிஐஏ சார்ந்த கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் தான் சார்ந்த கட்சிக்கும் நாடு முழுவதும் எதிர்ப்பு தங்களை சார்ந்திருக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லாமல் எதிர்ப்பு தேடிக் கொடுத்து விட்ட திமுகவின் இளவரசரும் அவரை நாயகனாக கொண்டாடும் திமுகவினரும் தங்களின் இளவரசரும் அவரது பேச்சும் நாடு முழுவதும் போய் சேர்ந்து விட்டதாகவும் அதன் மூலம் அவர் தேசிய அளவில் பிரபலம் ஆகிவிட்டதாகவும் பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்களின் தலைவர் நாடு முழுவதும் போய் சேரும்போதே ஒரு இந்து விரோத கட்சியின் இளவரசராக சனாதன விரோதியாக தான் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார். அது நமக்கு தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் பெரும் பின்னடைவையும் அவமதிப்பையும் தான் தேடிக் தருகிறது என்ற புரிதல் அவர்களுக்கு வந்த பாடில்லை.