உக்ரைன் போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இதனால், உக்ரைனில் இருக்கும் வெளிநாட்டினர் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அதன்படி, உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் ஹங்கேரி, ருமேனியா போன்ற அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்ளை மீட்க பாரத பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார். அந்த வகையில், ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை அறிவித்து விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது, மீட்புப் பணியில் விமானப்படை விமானங்களையும் களமிறக்கி விட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
இந்த நிலையில், உக்ரைனில் போர் உச்சத்தை அடைந்திருப்பதால், அங்கிருக்கும் இந்தியர்கள் ரயில் மார்க்கமாகவோ, சாலை மார்க்கமாகவோ உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, உக்ரைன் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதற்காக இந்திய மாணவர்கள் சிலர் ரயில் நிலையம் நோக்கிச் சென்றிருக்கிறார்கள். அப்போது, அங்கு நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இந்திய மாணவன் பலியானதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்த மாணவன் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்பது தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதர்களிடம் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.