ஆபரேஷன் கங்காவில் இந்திய விமானப்படை!

ஆபரேஷன் கங்காவில் இந்திய விமானப்படை!

Share it if you like it

உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை அதிகரிக்க, ஆபரேஷன் கங்கா திட்டத்தில் இந்திய விமானப்படையும் இணையுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

பிப்ரவரி 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால், உக்ரைனில் சிக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. ஆனால், உக்ரைன் நாட்டின் வான்வழி மூடப்பட்டிருப்பதால், இந்தியர்களை நேரடியாக உக்ரைனில் இருந்து மீட்க முடியவில்லை. ஆகவே, அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளுக்கு இந்தியர்களை வெளியேற்றி, அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அந்த வகையில், நேற்று காலையில் 249 மாணவர்களுடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 5-வது விமானம் டெல்லி வந்து சேர்ந்தது. தொடர்ந்து, மாலையில் ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் டெல்லி வந்து சேர்ந்தது. இந்த நிலையில், ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து 182 இந்தியர்களுடன் புறப்பட்ட 7-வது விமானமும் இன்று காலையில் மும்பை வந்தடைந்தது. அதேபோல், 8-வது விமானமும் இந்தியா வந்திருக்கிறது. 9-வது விமானம் விரைவில் இந்தியா திரும்பும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார் பாரதப் பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்தே, மீட்புப் பணியில் ஈடுபட இந்திய விமானப்படையை அழைத்திருக்கிறார். ஆகவே, விமானப்படை விமானங்களும் ஆபரேஷன் கங்கா திட்டத்தில் இணைந்து, உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடும். இந்த மீட்புப் பணியில் இந்திய விமானப்படையில் உள்ள சி-17 என்கிற அதிவேக விமானம் ஈடுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் இந்தியர்களை விரைவாகவும், பத்திரமாகவும் மீட்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜுஜு மற்றும் ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு தூதர்கள், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஒருங்கிணைக்க, உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it