கலைப்படைப்பு என்கிற பெயரில் காளி தேவியை கேலி செய்து, உக்ரைன் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கும் படம், உலகம் முழுவதிலும் உள்ள ஹிந்துக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
பாரத பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, இந்தியா அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும், கொரோனாவுக்குப் பிறகு உலக நாடுகள் முழுவதும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியா மட்டும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை மேலை நாடுகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக, இந்தியாவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இங்கிலாந்து நாட்டின் பி.பி.சி. தொலைக்காட்சி, குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 ஆவணப்படங்களை வெளியிட்டது.
அதேபோல, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், தொழிலதிபர் அதானி பங்குச்சந்தையில் முறைகேடு செய்வதாக குற்றம்சாட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதனால், உலகப் பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் இருந்த அதானி மேற்கண்ட பட்டியலில் இடம் பிடிக்க முடியாமலேயே போய்விட்டது. இதைத் தொடர்ந்து, ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நிறுவனம், உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடித்ததை கேலி செய்யும் விதத்தில் ஒரு கார்ட்டூனை வெளியிட்டது. தற்போது உக்ரைன் காளி தேவியை கேலி செய்திருக்கிறது.
அதாவது, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று அதிகாலை ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. அப்படம், வெடிகுண்டு வெடித்ததில் இருந்து எழும் புகை, ஒரு பெரிய மேகத்தை முட்டுவது போல இருக்கிறது. இதை போட்டோ எடுத்த உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், அப்படத்தை மர்லின் மன்றோ போஸ் கொடுப்பது போல மாற்றி அமைத்திருக்கிறது. இதில், வேதனை என்னவென்றால் மர்லின் மன்றோவை காளி தேவியைப் போல நீல நிறத்தில் வர்ணம் கொடுத்து, துண்டிக்கப்பட்ட தலைகள் கொண்ட மாலை அணிந்து, நாக்கை நீட்டியப்படி இருந்தது. இப்புகைப்படத்தை ‘கலைப்படைப்பு’ என்ற பெயரில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்திருந்தது. இது உலகம் முழுவதும் இருக்கும் ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கடும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி கமென்ட் போடவே, சிறிது நேரத்திலேயே அந்த புகைப்படத்தை நீக்கி விட்டது.