உக்ரைனில் இருந்து தன்னை மீட்டதற்காக, இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த சிலர் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. எனினும், இரு நாட்டு அதிபர்களுடன் பேசி, உக்ரைனில் சிக்கித் தவித்துவரும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருகிறது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு. அதேசமயம், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட இதர நாடுகள் தங்களது நாட்டு பிரஜைகளை மீட்க முடியாமல் திணறி வருகின்றன. 14-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையிலும் கூட, தொடர்ந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்காக, ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மேலும், இந்திய தூதரக அதிகாரிகளும் இந்தியர்களை மீட்டு பாதுகாப்பாக அனுப்புவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில், உக்ரைன் சிறையில் சிக்கித் தவித்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரையும் இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள். இந்தப் பெண்தான் பாரத பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அப்பெண் கூறுகையில், “வணக்கம் எனது பெயர் ஆஸ்மா ஷபிக்யூ. நான் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவள். உக்ரைனில் மிகவும் கடுமையான சூழ்நிலையில் சிக்கித் தவித்த என்னை இந்திய தூதரக அதிகாரிகள்தான் மீட்டனர். ஆகவே, எனக்கு உதவிய கீவ் நகரத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களை ஆதரித்ததற்கு நன்றி. இந்திய தூதரகத்தால் நான் நிச்சயம் பாதுகாப்பாக எனது வீட்டிற்கு செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று உணர்ச்சி பொங்க கூறியிருக்கிறார்.
அதேசமயம், உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலையிலும், தங்களை பாதுகாப்பாக மீட்ட பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசையும், பாரத பிரதமர் மோடியையும் பாராட்டுவதை விட்டுவிட்டு, விமர்சனம் செய்து வருகிறார்கள் இந்தியர்கள் என்பதுதான் வேதனை. உலகத்திற்கே பெரியண்ணன் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவே, தனது நாட்டு பிரஜைகளை மீட்க முடியாமல் அல்லாடி வருகிறது. அப்படி இருக்கும்போது, பாரதமும், பாரத பிரதமரும் தனது தேசத்தின் மக்களை பாதுகாப்பாக மீட்டு வருகிறார்கள். ஆனால், கொஞ்சம் கூட யோசிக்காமல் பாரத நாட்டை விமர்சிக்க இதுபோன்றவர்களுக்கு எப்படித்தான் மனது வருகிறதோ என்று வேதனை தெரிவிக்கிறார்கள் தேசப் பற்றாளர்கள்.
பாகிஸ்தான் பெண் பாராட்டுவதையும், இந்திய பெண் விமர்சிப்பதையும் கீழ்க்கண்ட காணொளியில் காணலாம்…