ஐ.நா.வில் பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய நிலையில், பிரதமர் மோடியை குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ திமிராக பேசியிருக்கிறார்.
பாகிஸ்தான் நாடு பயங்கரவாதிகளின் பிறப்பிடம் மற்றும் புகழிடம் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தான் ஒரு பயங்கரவாதிகளின் தேசம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இக்கவுன்சிலுக்கு இந்தியாதான் தற்காலிகமாக தலைமை வகிக்கிறது. இக்கூட்டத்தில், ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “இந்த உலகம் பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக பார்க்கிறது. பயங்கரவாதம் எங்கிருந்து உருவாகிறது என்பதை சர்வதேச சமூகம் தெரிந்து கொண்டிருக்கிறது” என்று பாகிஸ்தானை நோக்கி கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
ஜெய்சங்கரின் இந்த கருத்து குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, “நான் இந்தியாவுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். ஒசாமா பின்லேடன் தற்போது உயிருடன் இல்லை. ஆனால், குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் இருக்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவர் (பிரதமர் மோடி) பிரதமராகும் வரை அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இவர்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரதமர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஹிட்லரால் ஈர்க்கப்பட்டவர்கள்” என்று கூறினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் தனிப்பட்ட விமர்சனம், சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிலாவல் பூட்டோவுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து இந்திய வெளியுறவுத் துறை வெளிட்டுள்ள அறிக்கையில், ‘பயங்கரவாதத்தை வளர்த்து உலகம் முழுவதும் பரப்பும் நாடு பாகிஸ்தான்’ என்று தெரிவிக்கப்பட்டஇருக்கிறது.
மேலும், இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கள் அநாகரீகத்தின் உச்சம். சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் பெரிதாக மாறியபோதுபோல் தெரியவில்லை. பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் மற்றும் நிதியளிப்பதில் பாகிஸ்தானின் மறுக்க முடியாத பங்கு உலக அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளை பயன்படுத்தும் பாகிஸ்தானின் இயலாமையே பிலாவல் பூட்டோவின் பேச்சாக வெளிப்படுகிறது. நியூயார்க், மும்பை, புல்வாமா, பதான்கோட் மற்றும் லண்டன் போன்ற நகரங்கள் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற மற்றும் தூண்டப்பட்ட பயங்கரவாதத்தின் வடுக்களை தாங்கி நிற்கின்றன. ‘மேட் இன் பாகிஸ்தான்’ தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் ஒசாமா பின் லேடனை ‘ஒரு தியாகி’ என்று போற்றுகிறது லக்வி, ஹபீஸ் சயீத், மசூத் அசார், சாஜித் மிர் மற்றும் தாவூத் இப்ராஹிம் ஆகியோருக்கு அடைக்கலம் அளிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட 126 பயங்கரவாதிகளில் 27 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்” என்று கடுமையாக சாடியிருக்கிறார்.
பா.ஜ.க. இளைஞர் பிரிவான யுவமோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா தமது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோதிக்கு எதிரான பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கேவலமான மற்றும் இழிவான கருத்துகளை யுவ மோர்ச்சா கடுமையாக கண்டிக்கிறது. பயங்கரவாதத்தை மட்டுமே ஏற்றுமதி செய்யும் நாடு பாகிஸ்தான். அவரிடமிருந்து இதைவிட சிறப்பாக எதையும் எதிர்பார்க்க முடியாது” என்று கூறியிருக்கிறார். இந்திய பிரதமர் மோடி பற்றிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் கருத்து சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.