உ.பி.யில் பள்ளி சிறுமிகள் 12 பேர் பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் முகமது அலி கைது!

உ.பி.யில் பள்ளி சிறுமிகள் 12 பேர் பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் முகமது அலி கைது!

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளிச் சிறுமிகள் 12 பேரை பாலியல் வன்புணர்வு செய்த ஆசிரியர் முகமது அலியை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் அருகேயுள்ள தில்ஹார் காவல் நிலையப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக அனில் குமார், கணினி ஆசிரியராக முகமது அலி, உதவி ஆசிரியையாக ஷாஜியா ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு படிக்கும் மாணவிகளிடம் ஆசிரியர் முகமது அலி, கடந்த பல ஆண்டுகளாகவே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆனால், ஆசிரியருக்கு பயந்துகொண்டு மாணவிகள் யாரும் வெளியில் சொல்லவில்லை.

இந்த நிலையில், ஆசிரியர் முகமது அலியின் டார்ச்சர் தாங்காமல், சில மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அனில் குமாரிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி ஒருவர், தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். மேலும், தன்னிடம் மட்டுமல்லாது தனது வகுப்புத் தோழிகள் சிலரிடமும் இதுபோன்ற தகாத செயலில் ஈடுபடுவதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்தே மேற்கண்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை மற்றும் இதர மாணவிகளின் பெற்றோர் சேர்ந்து பள்ளியை சோதனை செய்தனர். அப்போது, பள்ளியின் கழிப்பறையில் பயன்படுத்திய ஆணுறைகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

இதையடுத்து, இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தில்ஹார் போலீஸில் புகார் செய்தனர். விசாரணையில் கணினி ஆசிரியர் முகமது அலி, பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 12 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஆசிரியர் முகமது அலியை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பள்ளித் தலைமை ஆசிரியர் அனில்குமார், உதவி ஆசிரியை ஷாஜியா ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இருவரையும் சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.


Share it if you like it