உத்தரப் பிரதேசத்தில் கோயிலில் புகுந்து சுவாமி சிலைகளை உடைத்த முகமது ஆசாத் என்பவனை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அல்கர் மாவட்டம் பன்னாதேவியின் ரசல்கஞ்ச் காவல் நிலையத்திற்கு அருகில் பழமையான சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. இக்கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் பூஜை நடந்து வருகிறது. இந்த சூழலில், அலிகர் சிவில் லைன்ஸ் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் முகமது ஆசாத் என்பவன், நேற்று முன்தினம் இரவு இக்கோயிலுக்குள் நுழைந்திருக்கிறான். பின்னர், தான் கொண்டு வந்திருந்த சுத்தியலால் அங்கிருந்த சிவன் சிலை உட்பட 6 சிலைகளை அடித்து நொறுக்கி இருக்கிறான்.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விழித்துப் பார்த்திருக்கிறார்கள். அப்போது, ஒரு இளைஞர் சுத்தியால் சுவாமி சிலைகளை உடைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே, சம்பவ இடத்தில் அப்பகுதி மக்கள் குவிந்தனர். மேலும், அப்பகுதி பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மேயருமான சகுந்தலா பார்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர், போலீஸில் புகார் செய்தார். விரைந்து வந்த போலீஸார், முகமது ஆசாத்தை கைது செய்தனர்.
இதுகுறித்து சகுந்தலா பார்தி கூறுகையில், இப்பகுதியில் கோயில் சிலைகளை உடைக்கப்படுவது இது முதல் முறை அல்லை. ஏற்கெனவே 3 முறை இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது. ஆகவே, ஹிந்துக் கோயில்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.