உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷங்களை எழுப்பிய பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) வேட்பாளர் பப்பு கான் மற்றும் அவரது உதவியாளர் குர்ஷீத் அகமது ஆகியோரை ஆசம்கர் போலீஸார் கைது செய்தனர்.
நம் நாட்டிலுள்ள பிரிவினைவாதிகள், தேர்தல் பிரசாரத்தின்போதும், போராட்டங்ளின்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்புவது வழக்கம். குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் இந்த கோஷம் அதிகமாகவே இருக்கும். தவிர, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் இதுபோன்ற கோஷங்களை கேட்ட முடியும். அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தல் ஊர்வலத்தின்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் காண்டே போலீஸ் பகுதிக்கு உட்பட்ட டோகோடி பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இதற்கான வேட்புமனு தாக்கலின்போது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து, ஜார்க்கண்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் டோகோடி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் எம்.டி.ஷாகிர் ஹுசைன், அவரது உதவியாளர்களான ஆசிப் மற்றும் சோஹைப் ஆகியோர் அடங்குவர்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜஹானகஞ்ச் பகுதிக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. இத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், பப்பு கான் போட்டியிடுகிறார். இதையொட்டி, பப்பு கான் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று பப்பு கானும், அவரது ஆதரவாளர்களும் கோஷம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, ஆசம்கார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பி.எஸ்.பி. வேட்பாளர் பப்பு கான் மற்றும் அவரது ஆதரவாளர் குர்ஷீத் அகமது ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து ஆசம்கர் எஸ்.பி. அனுராக் ஆர்யா கூறுகையில், பிரசாரத்தின்போது பி.எஸ்.பி. வேட்பாளர் பப்பு கான் மற்றும் அவரது கூட்டாளி குர்ஷீத் அகமது ஆகியோர் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் ஜஹானகஞ்ச் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வைரலான வீடியோ தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. தவிர, அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அப்படி இருக்க, பிரசார பேரணி எப்படி நடந்தது, அனுமதி கோரப்பட்டதா என்பதையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்.