உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் அமைச்சர் யாகூப் குரேஷியை போலீஸார் கைது செய்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யாகூப் குரேஷி. அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். மாயாவதியின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். இவரும், இவரது குடும்பத்தினரும் இணைந்து அல் ஃபஹிம் மீடெக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற இறைச்சி பேக்கேஜிங் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலை நடத்தி வந்தனர். இந்த தொழிற்சாலை கர்கௌடா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அல்லிபூர் ஜிஜ்மானா திகௌலி கிராமத்தில் அமைந்திருக்கிறது. இத்தொழிற்சாலையில் அரசின் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக இறைச்சி பேக்கிங் மற்றும் பதப்படுத்தும் தொழில் நடந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இத்தொழிற்சாலையில் தரமற்ற மற்றும் கெட்டுப்போன இறைச்சிகள் பேக்கிங் செய்யப்படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, கடந்தாண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி, மேற்படி தொழிற்சாலையில் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அத்தொழிற்சாலையில் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், யாகூப் குரேஷி, அவரது மனைவி ஷம்ஜிதா பேகம், அவரது மகன்கள் இம்ரான் குரேஷி, பெரோஸ் குரேஷி மற்றும் 18 பேர் மீது கார்கௌடா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, யாகூப் குரேஷி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். போலீஸார் பல்வேறு இடங்களில் தேடி வந்த போதிலும், யாரையும் கைது செய்ய முடியவில்லை. ஆகவே, யாகூப் குரேஷி குடும்பத்தினரை கைது செய்பவர்களுக்கு வெகுமதி அளிப்பதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்தாண்டு நவம்பர் மாதம் 25,000 ரூபாய் வெகுமதியுடன் ஃபெரோஸ் குரேஷி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மற்றவர்களை தேடும் படலம் நடந்து வந்தது. இந்த சூழலில்தான், யாகூப் குரேஷியும், அவரது மற்றொரு மகன் இம்ரான் குரேஷியும் டெல்லியில் இருப்பதாக மீரட் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லிக்கு விரைந்த மீரட் போலீஸார், அம்மாநில போலீஸார் உதவியுடன் டெல்லி சாந்தினி மகால் பகுதியில் பதுங்கி இருந்த யாகூப் குரேஷியையம், அவரது மகன் இம்ரான் குரேஷியையும் கைது செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு 50,000 ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
யாகூப் குரேஷி நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதியாவர். 4 முறை மீரட் மேயராக இருந்த இவர், முகமது நபியின் கார்ட்டூனை வெளியிட்டதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லி ஹெப்டோ பத்திரிகையின் கார்ட்டூனிஸ்டுகளின் தலையை துண்டிப்பவர்களுக்கு 51 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். பின்னர், சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து 8 பத்திரிகையாளர்கள் உட்பட 12 பேரைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு அந்தத் தொகையை வழங்குவதாக அறிவித்தார். இவர், சுற்றுச்சூழலை காப்பதற்காக இறைச்சிகளை தடை செய்யக் கோரி இயக்கத்தைத் தொடங்கிய சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தாக்கிய குற்றச்சாட்டிலும் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.