காங்கிரஸை ‘கை’கழுவிய கபில்சிபல்!

காங்கிரஸை ‘கை’கழுவிய கபில்சிபல்!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல்.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தது அகில இந்திய காங்கிரஸ் கட்சி. இடையில் 1998 முதல் 2004-ம் ஆண்டுவரை பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்தது. பிறகு, காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்தது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுவரை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மிகவும் பழமையான கட்சி என்பதால், அக்கட்சியில் ஏராளமான மூத்த தலைவர்கள் இருந்து வருகிறார்கள். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் பலரும் வெளியேறி பா.ஜ.க. அல்லது மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவரும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவருமான மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல், அக்கட்சியிலிருந்து விலகி இருக்கிறார். இவர், காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது இவரது பதவிகாலம் நிறைவடைகிறது. இந்த சூழலில்தான், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருக்கிறார் கபில் சிபல். காரணம், உ.பி.யில் காங்கிரஸ் கட்சி வெறும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. ஆகவே, காங்கிரஸ் கட்சியால் தன்னை மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக்க முடியாது என்பதால், கபில் சிபல் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே, அகிலாஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக முயற்சி எடுத்து வருகிறார். இதன் காரணமாக கபில்சிபல், சமாஜ்வாதி கட்சியில் இணையலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவை பொறுத்தவரை இன்னும் 30 முதல் 40 ஆண்களுக்கு பா.ஜ.க.தான் வலுவான கட்சியாக இருக்கும் என்று அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதன் பிறகு, காங்கிரஸ் கட்சி தேறாது என்று முடிவு செய்த அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். அந்த வகையில், குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல், கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து வெளியேறினார். தற்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் வெளியேறி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து மேலும் பலரும் வெளியேற தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ஆகவே, காங்கிரஸ் கூடாரம் விரைவில் காலியாகும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


Share it if you like it