ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: 7 பேருக்கு மரண தண்டனை!

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: 7 பேருக்கு மரண தண்டனை!

Share it if you like it

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 7 பேருக்கு உத்தரப் பிரதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்திருக்கிறது.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் உம்மா, அல் கொய்தா, சிமி உள்ளிட்ட பல்வேறு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நம் நாட்டில் சதிச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார்கள். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை மத்திய அரசையும், மாநில அரசுகளையும் எச்சரித்து வருவதோடு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து அவ்வப்போது கைது செய்து வருகிறது. எனினும், புல்வாமா தாக்குதல், கோவையில் கார் குண்டு வெடிப்பு உள்ளிட்ட சில அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், நாடு முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கு நம் நாட்டில் இருக்கும் சில அடிப்படைவாதிகள் உதவி புரிவதாகவும், உபி. மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கடந்த 2017-ம் ஆண்டு தகவல் கிடைத்தது, இதையடுத்து, அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு, முகமது பைசல் என்பவனை கைது செய்தனர். அவனிடம் நடந்த விசாரணையில், கவுஸ் முகமது கான், முகமது அசார், அதிக் முசாபர், முகமது டானீஸ், முகமது சயீத் மீர் ஹூசைன், ஆசிப் இக்பால் மற்றும் முகமது அதிப் என்கிற ஆசிப் இரானி ஆகியோரையும் கைது செய்தனர்.

இதையடுத்து, மேற்கண்ட 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, தசரா பண்டிகை கொண்டாட்டத்தின்போது, மேற்படி 7 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்த சதி செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். மேலும், மேற்படி 7 பேரும் இஸ்லாமிய அடிப்படைவாத மத பிரசாரகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று கூறியதோடு, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இணையதளத்தை அடிக்கடி பார்த்தாகவும், அதிலி இடம்பெற்றிருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு பரப்பியதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, மேற்படி 7 பேர் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஆயுதங்கள், வெடிமருந்துகள், மின்னணு சாதனங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூழலில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வி.எஸ்.திரிபாதி, இவ்வழக்கு அரிதிலும் அரிதான வகையில் வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியதுடன், 7 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.


Share it if you like it