குரான் எரிப்பு… கல்வீச்சு, கலவரம்: தாஜ் முகமது கைது!

குரான் எரிப்பு… கல்வீச்சு, கலவரம்: தாஜ் முகமது கைது!

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தில் குரானை எரித்து, மதக் கலவரத்தை தூண்ட முயன்ற, தாஜ் முகமதுவை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் கோட்வாலி பகுதியில் அமைந்திருக்கிறது ஃபக்ரே ஆலம் மசூதி. இங்கு நேற்று முன்தினம் மாலை புகுந்த மர்ம நபர் ஒருவர், மசூதிக்குள் இருந்த குரான் நகலை எரித்திருக்கிறார். மாலை தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்கள் குரான் எரிவதை பார்த்துவிட்டு பதட்டமடைந்தனர். இத்தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து, சாலையில் திரண்ட இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள் வீடுகள், கடைகள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதோடு, சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர். மேலும், அப்பகுதியில் பலத்த போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது, தொழுகைக்கு முன்னதாக ஒரு நபர் மசூதிக்குள் இருந்து வெளியே வருவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், அதேபகுதியான பருஜாய் பகுதியைச் சேர்ந்த தாஜ் முகமது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மாலை தாஜ் முகமது போலீஸார் கைது செய்தனர்.

குரானை எரித்து ஹிந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் தாஜ் முகமது செயல்பட்டது தெரியவந்தது. ஆனால், அவரது குடும்பத்தினரோ தாஜ் முகமது சற்று மனநலம் சரியில்லாதவர் என்று கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஆனந்த் கூறுகையில், “புதன்கிழமை மாலை நகரின் கோட்வாலி பகுதியில் அமைந்துள்ள ஃபக்ரே ஆலம் மசூதியில் புனித நூலின் சில பகுதி எரிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இந்த வழக்கில் உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு எந்த தாமதமும் இன்றி விசாரணை நடத்தப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். பின்னர் பருஜாய் பகுதியில் இருந்து தாஜ் முகமது என்பவர் கைது செய்யப்பட்டார்” என்றார்.


Share it if you like it