நொய்டா இரட்டை கோபுரம் நொடிகளில் தகர்ப்பு!

நொய்டா இரட்டை கோபுரம் நொடிகளில் தகர்ப்பு!

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரங்கள் 10 நொடிகளுக்குள் முழுவதுமாக தகர்க்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் தலா 40 தளங்கள் அடங்கிய 2 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட, டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சூப்பர் டெக் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக, 632 பேரிடம் முன்பணம் வாங்கப்பட்டு, நொய்டாவின் ஏ.டி.எஸ். என்கிற கிராமத்தில், எமரால்ட் குடியிருப்பு பகுதியில், தி டவர்ஸ் அபெக்ஸ் என்கிற பெயரில் பணிகளும் துவக்கப்பட்டன. இந்த இரட்டை கோபுரங்களில் அப்பெக்ஸ் என்ற கட்டடத்தில் 32 தளங்களும், சியான் கோபுரத்தில் 29 தளங்களும் கட்டி முடிக்கப்பட்டன. ஆனால், இந்த குடியிருப்புக்கு 2004-ம் ஆண்டு அனுமதி வாங்கும்போது, ஒரு கட்டடத்தில் 14 தளங்களும், மற்றொரு கட்டடத்தில் 9 தளங்களும் மட்டுமே கட்டுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதேசமயம், 2012-ம் ஆண்டு இத்திட்டம் திருத்தப்பட்டு, 2 கட்டடங்களிலும் தலா 40 தளங்கள் வரை கட்டுவதற்கு நொய்டா ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது.

ஆகவே, இது விதிமீறல் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இரட்டை கோபுரங்களையும் இடிக்க உத்தரவிட்டது. ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது கட்டுமான நிறுவனம். இந்த வழக்கிலும் கட்டடத்தை இடிக்கும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மேற்படி இரட்டை கோபுரங்களை ஆகஸ்ட் 28-ம் தேதி தகர்க்க திட்டமிடப்பட்டது. இதற்காக, 20 கோடி ரூபாய் செலவில் கட்டடத்தின் 20,000 இடங்களில் 3,700 கிலோ வெடிமருந்துகள் நிரப்பப்பட்டன. பின்னர், திட்டபடி இன்று பிற்பகல் 2 மணியளவில் பிரம்மாண்ட இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. கட்டடம் இடிக்கப்பட்டதில் சுமார் 55,000 டன் கழிவுகள் குவிந்திருக்கிறது. இதனை அகற்ற 3 மாதங்களுக்கு மேலாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it