கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு 500, 1,000 ரூபாய் என கொடுத்து அழைத்து வந்திருந்ததாக சிறப்பு புலனாய்வுத்துறை தெரிவித்திருக்கிறது.
பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, முகமது நபி பற்றி பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதலில் கலவரத்தில் ஈடுபட்டது உ.பி.யைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள்தான். உ.பி. மாநிலம் கான்பூரில் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடிந்து வெளியேவந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அப்பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள், ஹிந்துக்களின் கடையை அடைக்க வலியுறுத்தினர். பின்னர் ஊர்வலமாக வந்தவர்கள், ஹிந்துக்கள் வசிக்கும் பகுதியில் வந்தபோது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இது கலவரமாக மாறிய நிலையில், கூட்டத்தில் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும், ஹிந்துக்கள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதோடு, கத்தி போன்ற கூரிய ஆயுதங்களாலும் தாக்கினர். மேலும், ஒரு அடிப்படைவாதி கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடும் நடத்தினான். இந்த கலவரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 1500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், கலவரம் தொடர்பாக உளவுத்துறை விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணையில்தான், கலவரக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்துவதற்கு 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை கொடுத்து அழைத்து வரப்பட்டிருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது. அதாவது, கான்பூர் கலவரம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கலவரத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் 10 நாட்களுக்கு முன்னதாகவே, கலவரத்தில் ஈடுபடுவதற்காக ஆட்களை அழைத்து வந்திருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு கல்வீசி தாக்குதல் நடத்துவது, பெட்ரோல் குண்டுகளை வீசுவது, கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதில், கல்வீசி தாக்குதல் நடத்துபவர்களுக்கு தலா 500 ரூபாய் முதல் 1,000 ரூபாயும், பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை கையாள்பவர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக 10 நாள் பயிற்சி கொடுத்தவர்கள், எந்தெந்த ஸ்பாட்டில் இருந்து கல்வீச வேண்டும் என்பதையும் முன்கூட்டியே திட்டமிட்டு, அங்கெல்லாம் கற்களை தயாராக கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். பின்னர், திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தவுடன், திட்டத்தை கச்சிதமாக அரங்கேற்றி இருக்கிறார்கள் என்று சிறப்பு புலனாய்வுத்துறையின் விசாரணையில் தெரியவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.