உ.பி. ‘பாட்ஷா’ அதிக் அகமது மகன் என்கவுன்ட்டர்!

உ.பி. ‘பாட்ஷா’ அதிக் அகமது மகன் என்கவுன்ட்டர்!

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாட்ஷா என்று அழைக்கப்படும் தாதா அதிக் அகமதுவின் ஒரே மகனை போலீஸார் என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் அதிக் அகமது. பிரபல தாதாவான இவர் மீது 30-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும், 60-க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் வழக்குகளும் உள்ளன. திடீரென அரசியல் கட்சியைத் தொடங்கிய அதிக் அகமது, பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். தொடர்ந்து, மேற்கு அலகாபாத் தொகுதியில் நின்று எம்.பி.யாக வெற்றி பெற்றார். இந்த சூழலில், கடந்த 2005-ம் ஆண்டு தனது சகோதரர் அஷ்ரஃபை, எம்.எல்.ஏ. தேர்தலில் தோற்கடித்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ராஜு பால் என்பவரை, நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். ஆனாலும், சமாஜ்வாதி ஆட்சி நடைபெற்றதால் அதிக் அகமது ஜாமீனில் சுதந்திரமாக வெளியே நடமாடி வந்தார்.

ஆனால், உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். இதன் பிறகு, அதிக் அகமது சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவரது பல சொத்துகளும் அரசு கைப்பற்றியது. இதனிடையே, எம்.எல்.ஏ. ராஜு பால் கொலை வழக்கில் சாட்சியான உமேஷ் பால் என்ற வழக்கறிஞரை, கடந்த பிப்ரவரி மாதம் அதிக் அகமதின் ஆதரவாளர்கள் பட்டப்பகலில் சுட்டுக் கொன்றனர். இக்கொலையை அரங்கேற்றியது அதிக் அகமதின் ஒரே மகனான ஆசாத் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆசாத்தையும், அவரது கூட்டாளி குலாமையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும், இருவரைப் பற்றியும் தகவல் அளிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீஸார் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான், ஆசாத்தும், குலாமும் ஜான்ஸியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று மதியம் போலீஸார் ஸ்பாட்டுக்குச் சென்றபோது, ஆசாத்தும், குலாமும் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது. போலீஸாரும் பதிலுக்கு சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தகவல் கொலை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட அதிக் அகமதுவிடம் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட அதிக் அகமது அதிர்ச்சியில் அழுது புரண்டிருக்கிறார். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது இதுதானோ!


Share it if you like it