சிவன் கோயிலுக்குள் இறைச்சித் துண்டுகள் வீசப்பட்டதால் ஆத்திரமடைந்த ஹிந்துக்கள் அப்பகுதியில் இருந்த இறைச்சிக் கடைகளுக்கு தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபகாலமாகவே இந்தியாவில் ஹிந்துக்களுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, ஹிந்து கோயில்களுக்குள் புகுந்து சுவாமி சிலைகளை சேதப்படுத்துவது, கோயில்களுக்குள் இறைச்சித் துண்டுகளை வீசுவது போன்ற அராஜக செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலும் ஹிந்து கோயிலுக்குள் இறைச்சித் துண்டுகள் வீசப்பட்டிருக்கும் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உ.பி. மாநிலம் கன்னோஜ் மாவட்டம் ரசூலாபாத் என்னும் கிராமத்தில் ஒரு சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டுள்ளது.
மறுநாள் வழக்கம்போல தினசரி பூஜைகளை செய்வதற்காக அதிகாலை 4 மணியளவில் பூசாரி ஜெகதீஷ் ஜாதவ் கோயிலுக்கு வந்திருக்கிறார். கோயிலை திறந்து உள்ளே வந்து பார்த்தபோது, ஆங்காங்கே இறைச்சித் துண்டுகள் சிதறிக் கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி ஜெகதீஷ், கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ஊர் மக்கள் அனைவரும் கோயிலுக்கு முன்பாக திரண்டனர். இறைச்சி வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தல்கிராம் – இந்தர்கர் சாலையை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தாசில்தார் சிவபிரதாப் சிங், சப் கலெக்டர் சிப்ராமாவ் அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளும், போலீஸாரும் கோயிலுக்கு விரைந்து வந்தனர்.
பின்னர், போலீஸாரும், வருவாய்த்துறையினரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனிடையே, கோயிலுக்குள் இறைச்சித் துண்டுகள் கிடந்த விவகாரம் காட்டுத் தீ போல அக்கம் பக்கம் கிராமங்களிலும் பரவியது. மேலும், இந்த விஷயம் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பரவவே, கடும் ஆத்திரமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஹிந்து அமைப்பினர் அப்பகுதியில் இருந்த இறைச்சிக் கடைகளுக்கு தீவைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கோயிலுக்குள் இறைச்சித் துண்டுகளை வீசியவர்கள் யார் என கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்களும், ஹிந்து அமைப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதன் பிறகு, கோயில் சுத்தம் செய்யப்பட்டு வழக்கம்போல பூஜைகள் நடந்தன. அதேசமயம், இறைச்சிக் கடைகளுக்கு தீவைத்ததை கண்டித்து, கோயிலிருந்த சுவாமி சிலைகளை சிலர் அவமதித்தனர். இதனால், அங்கு மீண்டும் பதட்டமான சூழல் உருவானது. இதையடுத்து, நிலைமையை சமாளிக்க கன்னோஜில் இருந்து கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன. காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஸ்குமார் ஶ்ரீவஸ்தவா, தல்கிராமிற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். தொடர்ந்து, ரசூலாபாத் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.